'எல்லையில் இந்திய மாணவர்களை உக்ரைன் வீரர்கள் தடுத்தனர்': நாடு திரும்பிய காரைக்கால் மாணவி பேட்டி

காரைக்கால்: ”இந்திய மாணவர்களை வெளியேற விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைளில் உக்ரேனிய வீரர்கள் ஈடுபடுகின்றனர்”: நாடு திரும்பிய காரைக்கால் சேர்ந்த மாணவி தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள், 2 மாணவிகள் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது அங்கு போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன்- ஜெயலட்சுமி தம்பதியர் மகள் சிவசங்கரி மீட்கப்பட்டு நேற்று புதுடெல்லி வந்து சேர்ந்தார்.

பின்னர் சென்னை வந்து, அங்கிருந்து காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட கார் மூலம் இன்று காலை காரைக்கால் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

மாவட்ட ஆட்சியர அர்ஜுன் சர்மா மாணவி சிவசங்கரியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு தெரிவித்தார். தொடர்ந்து உக்ரைனில் உள்ள போர் சூழல், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் உள்ளிட்டவை குறித்து மாணவியிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். மாவட்ட துணை ஆட்சியர் எஸ்.பாஸ்கரன் உடனிருந்தார்.

மாணவி சிவசங்கரி கூறியது: ”உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் மருத்துவம் படித்து வந்தேன். தற்போதைய போரில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றான கார்கிவ் நகரிலிருந்து மிகவும் சிரமப்பட்டுதான் வெளியேற வேண்டியிருந்தது. உணவு, மளிகைப் பொருட்கள் கிடைக்கவில்லை, தூக்கம் இல்லை, படிப்பை தொடர முடியவில்லை.

போர் தொடங்கிய நாளன்றே எங்களை பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்க சொல்லிவிட்டனர். அதன் பின்னர் கடைகள் மூடப்பட்டு விட்டன. பெற்றோர்கள் உள்ளிட்ட எவருடனும் சரியாக தொடர்புகொள்ள முடியவில்லை. மின் வசதி, தண்ணீருக்கும் கூட சிரமப்ப வேண்டியிருந்தது.

அங்கிருந்து பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் வழிமுறைகள் குறித்து எங்களால் முடிந்த அளவுக்கான தகவல்களை அரசுக்கு எடுத்துக் கூறியிருந்தோம். மத்திய அரசு, புதுச்சேரி, தமிழக மாநில அரசுகளும் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

உக்ரைன் நாட்டின் எல்லையை கடந்து, இங்கு வந்து சேரும் வரையிலும் தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து தந்தன. மீதமுள்ள மாணவர்களயும் பாதுகாப்பாக விரைவில் மீட்டு அழைத்துவர வேண்டும் என்பதே எனது எண்ணம். மத்திய அரசுக்கும், புதுச்சேரி, தமிழக அரசுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய மாணவர்களை உக்ரேனியர்கள் பணயக் கைதிகளாக பயன்படுத்துவதாக ஒரு பேச்சு அங்கு இருந்து வந்தது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்திய மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உக்ரேனிய வீரர்கள் இந்திய மாணவர்களை வெளியேற விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளையும் செய்கின்றனர். மீட்பு நடவடிக்கைகளில் வட இந்திய மாணவர்கள், தென்னிந்திய மாணவர்கள் என பாகுபாடுகள் எதுவும் காட்டப்படவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.