பெட்ரோல் டேங்குகளை முழுவதுமாக நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள் – ராகுல் அட்வைஸ்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வந்த முறை மாற்றியமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய
பாஜக
அரசு அமல்படுத்தியது. அதனை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. சிறிதளவு இறங்கி பலமடங்கு ஏற்றம் கண்டு வருகிறது. கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிதமான விலையில் இருக்கிறபோதும், நம் நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிற பொருள்களின் விலைவாசியும் உயரும் சூழல் உருவாகி, பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு உட்பட்ட வரியை குறைத்தன. அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும் டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்தது.

அதன் பின்னர், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.40ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.91.43 என்ற விலையிலும் விற்கப்பட்டு வருகிறது.

ஆனால், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், “பெட்ரோல் டேங்குகளை முழுவதுமாக நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். மோடி அரசின் ‘தேர்தல் ஆஃபர்’ முடிவுக்கு வர உள்ளது.” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.