போர் நிறுத்தம் ஏற்படுமா..? உக்ரைன்-ரஷியா இடையே மார்ச் 7ஆம் தேதி மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை..!

கீவ்,
ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா.பொது சபை உறுப்பு நாடுகள் வலியறுத்தி உள்ளன. இந்த சூழலில் உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை குறித்து ரஷிய தூதுக்குழுவினர் விளக்கம் அளித்தார். 

அதில், அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடுகள் முற்றிலும் தெளிவாக உள்ளன. இதன் ஒரு பகுதியாக பரஸ்பர புரிதல் பேச்சு வார்த்தையின்போது காணப்பட்டது என்றும், முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற, பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்குவது மற்றும் அவைஉருவாக்கப்படும் பகுதிகளில் உள்ளூர் போர் நிறுத்தங்களைக் கடைப்பிடிப்பது குறித்து ரஷியாவும் உக்ரைனும் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டின என்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகரும், அந்நாட்டு தூதுக்குழு தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்திருந்தார்.  
மேலும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும்,  எனினும் அதில் சில ரஷிய மற்றும் உக்ரைன் பாராளுமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ரஷிய தூதுக்குழு உறுப்பினரும் அந்நாட்டின் மூத்த பாராளுமன்ற உறுப்பினருமான லியோனிட் ஸ்லட்ஸ்கி கூறியிருந்தார். 
இந்நிலையில் உக்ரைன்-ரஷியா இடையேயான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக உக்ரேனிய தூதுக்குழுவின் உறுப்பினரும், சட்டமியற்றுபவருமான டேவிட் அராகாமியா, தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். 
இதனிடையே உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு காரணமாக ரஷியாவில் வணிகம் செய்ய மறுக்கும் சர்வதேச பிராண்டுகளின் வளர்ந்து வரும் பட்டியலில் மூன்று நிறுவனங்களும் சேர்ந்துள்ளன. இதன்படி பயோனிர்(Payoneer), பேபால் ( Paypal), அடோப் (Adobe) ஆகியவை ரஷியாவில் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளன. 
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, “புதின், உக்ரைனை விட்டு விடுங்கள். இந்தப் போரில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள். ரஷியர்களின் உயிரைக் காக்க, இந்த இரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது… ஏற்கனவே 113 நிறுவனங்கள் ரஷ்யாவில், உங்களுடன் உடன் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. அவர்களின் முடிவுகளை நான் பாராட்டுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.  
முன்னதாக உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவில் மீண்டும் சண்டையை தொடங்குவதாக ரஷியா அறிவித்தது. அங்கு மனிதாபிமான தாழ்வாரங்களை உருவாக்குவதற்கும், மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கும் தற்காலிக போர்நிறுத்தம் இன்று நடைபெறவிருந்தது. ஆனால் ரஷிய துருப்புக்களின் அங்கிருந்து வெளியேற்றத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கிவ் இன்டிபென்டன்ட் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.