இசையில் மூழ்கும் உக்ரைனியர்கள்.. கீவ் நகரை சிதறடிக்க தயாராகும் ரஷ்யா!

ரஷ்யாவின் தாக்குதல் வேகம் பிடித்து வரும் நிலையில் தங்களது வேதனையை மறக்க இசையில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துள்ளனர் உக்ரைனியர்கள். மறுபக்கம் கீவ் நகரைப் பிடிக்க அனைத்து வகையான தாக்குதலுக்கு ரஷ்யா ஆயத்தமாகி வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்து 10 நாட்களாகி விட்ட நிலையில் சிறு சிறு லாபங்களை மட்டுமே இதுவரை ரஷ்யா பார்த்துள்ளது. பெரிய நகரம் என்று எதையும் கைப்பற்றவில்லை. கெர்சான் மட்டுமே சற்று பெரிய நகரமாகும். இந்த நிலையில் கீவ் நகரையும், கார்கிவ் நகரையும் பிடிக்க ரஷ்யா கடுமையாக போரிட்டு வருகிறது.

இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும், போர், தாக்குதல், உயிர்ப்பலி என்று இருக்கும் நிலையில், உக்ரைன் மக்கள் தங்களது கவனத்தை இசையின் பக்கம் திருப்ப ஆரம்பித்துள்ளனராம். தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவும், மனதை திடப்படுத்திக் கொள்ளவும், தைரியமூட்டிக் கொள்ளவும் இதுபோல இசையில் நாட்டம் செலுத்துகின்றனர்.

எங்க ஏரியா உள்ளே வராதே.. மண் மூட்டையால் தடை போடும் உக்ரைன் குட்டீஸ்..!

இதுதொடர்பாக ஏராளமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வீடுகளில் மட்டுமல்லாமல் பொது இடங்களிலும் கூட இசைக் கருவிகளுடன் பலர் இசையை இசைக்கின்றனர். ஒரு ஷெல்டர் முகாமில் ஒரு சிறுமி பாட்டுப் பாடுகிறார். அதாவது 2013ம் ஆண்டு வெளியான புரோசன் என்ற படத்தில்இடம் பெற்ற பிரபலமான லெட் இட் கோ என்ற பாடலை அந்த சிறுமி பாடுகிறார். அதைக் கேட்டு அனைவரும் உற்சாகமடைகின்றனர். உணர்ச்சிப்பூர்வமாக அதைக் கேட்கின்றனர்.

இன்னொரு வீடியோவில், ஒரு பெண் வெடிகுண்டு வீச்சிலிருந்து தப்பியோர் அடைக்கலம் அடைந்துள்ள முகாமில் வயலின் வாசிக்கிறார். அனைவரும் அதை மெய் மறந்து கேட்கின்றனர்.

மேற்கு உக்ரைனில் உள்ள விவ் நகரில் ஒரு பெண், நகரின் ரயில்வே நிலையத்இற்கு வெளியே பியானோ வாசிக்கிறார். அதை பலரும் கூடி நின்று கேட்டு ரசிக்கின்றனர். உக்ரைன் மக்கள் இந்தப் போரால் நிலைகுலைந்து போய்விடவில்லை. மாறாக ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளனர். ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். தைரியத்துடன் சூழலை எதிர்கொள்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா ஆயத்தமாகி வருகிறது. தலைநகரைப் பிடிக்க அனைத்து விதமான தாக்குதலுக்கும் அது தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானப்படை இல்லாமலேயே.. ரஷ்யா வேகமாக முன்னேறுகிறது.. பரபர தகவல்!

இதுதொடர்பாக உக்ரைன் ராணுவத் தரப்பில் கூறுகையில், ரஷ்யப் படைகள் ஒருங்கிணைய ஆரம்பித்துள்ளன. கீவ் நகர் மீது மிகப் பெரிய தாக்குதலுக்கு அவை தயாராகி வருகின்றன. பீரங்கிகள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றன. இர்பின் நகருக்கு அருகே இவற்றை குவித்து வருகின்றனர். ஆயத்த நிலைகளை ரஷ்யப்படைகள் செய்து வருகின்றன.

செர்னோபில் அணு உலைப் பகுதி வழியாக பெலாரஸிலிருந்து ரஷ்யப்படையினருக்குத் தேவையான சப்ளை பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கீவ் மட்டுமல்லாமல், கார்கிவ், செர்னிவ், சுமி, மைகோலியேவ் ஆகிய நகரங்களையும் ரஷ்யப்படைகள் சுற்றி வளைத்துள்ளன. இவற்றைப் பிடிக்க அதி வேகத் தாக்குதலுக்கு அவை திட்டமிடுகின்றன என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.