மஸ்கட்டில், புதிதாக மெட்ரோ ரெயில் சேவை: இம்மாத இறுதியில் ஆய்வு பணிகள்

மஸக்ட், 
ஓமன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்ட இயக்குனர் இப்ராகிம் பின் ஹமூத் அல் வைலி கூறியதாவது:-
நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போக்குவரத்து சேவைகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மஸ்கட் நகரில் புதிதாக மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான திட்டப்பணியை மேற்கொள்ளும் பொருட்டு இந்த மாத இறுதியில் மஸ்கட் நகரில் ஆய்வு பணி நடக்க இருக்கிறது. மொத்தம் 12 மாதங்கள் நடக்கும் இந்த ஆய்வு பணிகளில், மஸ்கட் நகரின் எப்பகுதியில் இருந்து எந்தெந்த நகரங்கள் வழியாக சேவைகள் இயக்கப்படும் என்பது அறிவிக்கப்படும். குறிப்பாக மஸ்கட் நகரின் சீப் பகுதியில் இருந்து நகரின் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் இந்த சேவைகள் இருக்கும்.

வருகிற 2040-ம் ஆண்டில் ஓமன் நாட்டில் மக்கள்தொகையானது 75 லட்சம் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 10 லட்சம் பேர் மஸ்கட் பகுதியில் வசிப்பவர்களாக இருப்பர். எனவே அந்த காலக்கட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போக்குவரத்தை நவீனப்படுத்தும் விதமாகவும் இந்த மெட்ரோ ரெயில் சேவை திட்டம் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.