கடந்த இரண்டு வாரங்களில் உக்ரைன் போர்… கடந்து வந்த பாதை

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 வாரங்கள் ஆகிறது. இதுவரை உக்ரைன் போர் கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்…

பிப்ரவரி- 21

கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் வசம் இருந்த லுஹான்ஸ் டொனட்ஸ் பகுதிகளை சுதந்திர நாடுகளாக ரஷியா அங்கீகரித்தது. உக்ரைன் எல்லையில் ரஷியா பல வாரங்களாக படைகளை குவித்து இருந்த நிலையில் அமைதியான முறையில் தீர்வு ஏற்படும் என்கிற நம்பிக்கை இதன் மூலம் முடிவுக்கு வந்தது.

பிப்ரவரி- 22

ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு படையெடுப்பதை சர்வதேச சட்டம் தடை செய்துள்ளது. ஆனால் தனி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட லுஹான்ஸ் டொனட்ஸ் ஆகியவற்றின் அழைப்பின் பெயரில் அமைதிகாக்கும் பணிக்காக ரஷிய ராணுவம் அங்கு செல்வதாக புதின் அறிவித்தார்.

போருக்கு முன்னோட்டமான ரஷியாவின் இந்த நடவடிக்கையை புரிந்துகொண்ட அமெரிக்கா ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

பிப்ரவரி -23

ரஷியாவின் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்காவை தொடர்ந்து  ஐரோப்பிய யூனியனும் பொருளாதார தடைகளை விதித்தது.

பிப்ரவரி -24

உக்ரைன் மீதான போரை ரஷியா தொடங்கியது. கிழக்கு உக்ரைனில் இருந்து லுஹான்ஸ் செர்னிகிவ் கார்கிவ் பகுதிகளுக்குள் ரஷிய ராணுவம் அதிரடியாக நுழைந்தது.

கடற்படை ஒடேசா, மரியுபோல் துறைமுக நகரங்களுக்குள் புகுந்தது. இதன் பிறகு உக்ரைன் தலைநகரான கிவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ நிலைகள் குறிவைத்து அழிக்கப்பட்டன.

பிப்ரவரி- 25

உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என்று பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்தது.

உக்ரைன் மக்கள் போர் உச்சம் அடைந்ததால் நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர்.

பிப்ரவரி -26

உக்ரைனில் இருந்து வெளியேறிய ஒரு லட்சம் பேர் பக்கத்து நாடான போலந்தில் தங்க முயன்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டது. ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை.

பிப்ரவரி -27

உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சன் ஆகிய நகரங்களை நோக்கி முன்னேறிய ரஷிய படைகள்  கடும் பாதிப்பை சந்தித்தன. சுமார் 4500 ரஷிய வீரர்கள் இதில் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்தது.

ரஷியாவின் 150 பீரங்கிகள், 700 கவச வாகனங்கள், 7 போர் விமானங்கள் ஆகியவற்றையும் அழித்து விட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி -28

ரஷியா, உக்ரைன் இடையே முதன் முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பக்கத்து நாடான பெலாரசில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அதே நேரத்தில் கார்கிவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் பலியானார்கள்.

மார்ச்-1

கார்கிவ் நகரின் மையப்பகுதியான சுதந்திர சதுக்கத்தின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க பாராளுமன்ற கூட்டுத்தொடரில் உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையான உக்ரைன் மீது விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும் என்பதை ஏற்க மறுத்துவிட்டார். அது போன்று அமெரிக்கா அறிவித்தால் அது ரஷியாவுடன் நேரடியாக மோதுவது போல் ஆகிவிடும் என்று அவர் கூறி விட்டார்.

மார்ச்-2

ரஷியாவை கண்டித்து ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 193 உறுப்பு நாடுகளில் 143 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டுபோட்டன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு  அமீரகம் ஆகியவை வாக்கெடுப்பை புறக்கணித்தன.

மார்ச் -3

தெற்கு உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுக நகரமான கெர்சன் பகுதியை ரஷிய படை கைப்பற்றியது.

மார்ச் -4

ஐரோப்பாவிலேயே பெரிய நகரமான சப்போர்ஷியா மீது ரஷிய படைகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அப்போது உக்ரைனில் இருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது.

ரஷியா-உக்ரைன் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பொதுமக்கள் வெளியேற பாதுகாப்பு வழிகளை ஏற்படுத்த இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

மார்ச் -5

மரியுபோல் நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேற மனிதாபிமான வகையில் வழித்தடத்தை ஏற்படுத்த அனுமதி அளிப்பதாக ரஷியா உறுதி அளித்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. அன்று மாலையிலேயே தனது தாக்குதலை மீண்டும் தொடர்ந்ததால் பொதுமக்கள் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.

மார்ச் -6

போர் அதிகரித்ததை அடுத்து ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க கோரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் பைடனுடன் போனில் பேசினார். விசா, மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவுடன் வணிகம் செய்வதை நிறுத்தின. உக்ரைன் வான்வழி மீது ரஷிய விமானங்கள் பறக்க எந்த நாடாவது தடை விதித்தால் அந்த நாடு போரில் பங்கேற்பதற்கு சமம் என்று புதின் எச்சரிக்கை விடுத்தார்.

மார்ச் -7

போர் தொடங்கி 2 வாரங்கள் முடிந்த நிலையில் போரின் உக்கிரம் அடுத்த கட்டத்தை எட்டிவிடும் அச்சம் ஏற்பட்டது. புதினுடன் ஏற்கனவே இரண்டு முறை போனில் பேசியிருந்த பிரதமர் மோடி 3-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தப்பட்டது. இதேபோன்று உக்ரைன் அதிபருடனும் மோடி பேசினார்.

மார்ச் -8

உக்ரைனில் உள்ள சுமி நகரில் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் காலை முதல் இரவு வரை போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ரஷியாவின் நடவடிக்கையை அடுத்து சுமார் 700 இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலமாக உக்ரைனில் இருந்து வெளியேறினார்கள். ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்க தடை விதித்தது.

மார்ச்- 9

பொதுமக்கள் வெளியேறுவதற்காக வழி ஏற்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒரு நாள் போர் நிறுத்தத்தை ரஷியாவும், உக்ரைனும் அறிவித்தன. இப்படி கடந்த 2 வாரங்களை தாண்டியும் உக்ரைன், ரஷியா போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே போகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.