எங்களின் யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது! 5மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா காந்தி….

டெல்லி: மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்; எங்களின் யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது என 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து  பிரியங்கா காந்தி கருத்துதெரிவித்து உள்ளார்.
நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய  உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அங்கு ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உள்கட்சி பிரச்சினையால் சிக்கி சின்னப்பின்னமான நிலையில், தற்போது ஆட்சியை பறிகொடுத்து படுதோல்வி அடைந்துள்ளது.
அதுபோல, உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று, பிரியங்கா காந்தி, அம்மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு, அயராது உழைத்து வந்தார். லக்கிம்பூர் கேரி வன்முறை, உன்னாவ் படுகொலை உள்பட பல்வேறு மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதுபோல மக்கள் போராளிகளுக்கு தேர்தலில் வாய்ப்பும் கொடுத்தார்.  கடந்த இரு ஆண்டுகளாக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு கடுமையாக பாடுபட்டார். ஆனால், அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில்  ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி  முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில்,  உ.பி. உள்பட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் வெளியிட்டுள்ளார்.  அதில், உத்தரபிரதேச  காங்கிரஸின் தொண்டர்கள் , வேட்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு எனது செய்தி. வாழ்க இந்தியா.. .ஜெய் காங்கிரஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,  “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்; எங்களது யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது, தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.