கணவருடன் பெங்களூருவில் முடங்கிய சேகர்பாபு மகள்: கர்நாடக அமைச்சருடன் சந்திப்பு

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி தனது காதல் காணவருடன் பெங்களூரு சென்று கர்நாடக அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு கோரியுள்ளார்.

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி (24) காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவர் சதீஷ் (27) உடன் சென்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திராவை பெங்களூருவில் புதன்கிழமை சந்தித்து தனது குடும்பத்தினரிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியிருகிறார்.

அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி தனது காதல் கணவர் சதீஷ் உடன் ஒரு வாரமாக பெங்களூருவில் முடங்கியிருக்கிறார். எம்.பி.பி.எஸ் மருத்துவரான ஜெயகல்யாணியும் சதீஷும் சில நாட்களுக்கு முன்புதான், வட கர்நாடகத்தில் ஒரு மடத்தில், வழக்கறிஞர்கள் செயல்பாட்டாளர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தனது தந்தையின் ஆட்கள் தங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று அவர்கள் அடிக்கடி தங்கள் இடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதாகக் கூறுகிறார்.

ஜெயகல்யாணியும் அவருடைய கணவர் சதீஷும் பெங்களூரு (கிழக்கு) கூடுதல் போலீஸ் கமிஷனர் சுப்ரமணியேஸ்வர ராவ்வை சந்தித்த பின்னர், கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திராவை சந்தித்து போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

ஜெயகல்யாணி சதீஷை காதலித்து தனது விருப்பத்தின் பேரில் திருமணம் நடந்ததாக கூறினார். தனது குடுபத்தினரின் எதிர்ப்பால், தங்களுக்கு பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதாகவும் தனது கணவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டதாகவும் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஜெயகல்யாணி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

புதுமணத் தம்பதிகளான ஜெயகல்யாணியையும் சதீஷையும் வாழ்த்திய கர்நாடக உள்துறை அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரூ போலீஸ் கமிஷனர் கமல் பண்ட் இடம் பேசினார். இதையடுத்து அமைச்சர் அரகா ஞானேந்திரா, இருவருக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார். மேலும், போலீச் கமிஷனர் பன்ட்டை சந்திக்கும்படி அறிவுறுத்தினார். சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டறிந்தால் காவல் துறையை தொடர்பு கொள்வதற்கு அவர்களிடம் போன் நம்பர் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அமைச்சர் சேகர் பாவுவின் மகள் ஜெயகல்யாணி நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர், அவருடைய காதல் கணவர் சதீஷ் வன்னியர் சமூகத்தச் சேர்ந்தவர். ஜெயகல்யாணி, தனது காதல் திருமணத்தில் தனது தந்தைக்கு சாதி பிரச்னை இல்லை. அந்தஸ்துதான் பிரச்னை என்கிறார்.

ஜெயகல்யாணி, ஒரு நண்பர் மூலமாக அறிமுகமாகி 2015ம் ஆண்டு முதல் ஜெயகல்யாணியும் சதீஷும் பேச ஆரம்பித்ததாக கூறுகிறார். இருவரும் காதலிக்க ஆரம்பித்து 2 ஆண்டு கழித்து தங்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தத என்றும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரும் மிரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கிறார் ஜெயகல்யாணி.

சதீஷும் திமுகவைச் சேர்ந்தவர்தான். ஜெயகல்யாணி மற்றும் சதீஷ் காதல் தெரியவந்த பிறகு, திமுக ஐ.டி. விங்கில் இருந்து சதீஷ் நீக்கப்பட்டார். இதற்கு முன்பு, 2021ம் ஆண்டு ஜெயகல்யாணியும் சதீஷும் வீட்டைவிட்டு வெளியேறி புனே சென்றதாகவும் அப்போது, சேகர்பாபுவின் ஆட்கள் சதீஷின் நண்பர்களையும் சதீஷின் குடும்பத்தினரையும் தாக்கியதாகக் கூறுகிறார் ஜெயகல்யாணி. பிறகு, இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு, இருவரையும் பிரித்தனர். தன்னை திருவள்ளூர் அருகே 2 மாதம் தனியாக வைத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், சதீஷ் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

சதீஷ் மீது இருக்கும் வழக்குகளில் 2014ம் ஆண்டு அதிமுக பேனரைக் கிழித்த ஒரு வழக்கு மட்டும்தான் போடப்பட்டிருந்தது. 2015க்கு பிறகு, தனது தந்தையின் அழுத்தத்தின் பேரில், போலீசார் சதீஷ் மீது பொய் வழக்குகள் போட்டனர். அவர் மீது போடப்பட்ட கொள்ளை வழக்கு பொய்யானது. அவர் மீது போடப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் தனது தந்தை சிக்க வைத்ததாகவும் ஜெயகல்யாணி தனது தந்தை மீது குற்றம் சாட்டுகிறார்.

ஜெயகல்யாணியும் சதீஷும் காதலிப்பதற்கு முன், சதீஷ் வேறொரு பெண்ணை காதலித்ததாகவும் இருவரும் சண்டை போட்டி பிரிந்த பிறகு, அவர் அந்த பெண்ணை ஏமாற்றியதாக பொய் வழக்கு போட்டனர். பின்னர் அந்த வழக்கு பாலியல் பலாத்கார வழக்காக மாற்றப்பட்டது என்று ஜெயகல்யாணி தனது கணவர் மீதான வழக்குகள் பற்றி கூறுகிறார்.

தங்களுடைய காதலுக்கு தனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனது காதல் கணவருடன் ஒரு வாரமாக பெங்களூருவில் முடங்கி இருக்கிறார். தனது காதல் திருமணத்துக்கு குடும்பத்தினரின் அச்சுறுத்தல் இருப்பதால் ஜெயகல்யாணி பெங்களூருவில் கர்நாடக அமைச்சரை சந்தித்து போலீஸ் பாதுகாப்பு கோரியிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.