ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு மோடி சொன்ன மெசேஜ்: நான் ஓய்வு பெற மாட்டேன்!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு புது தெம்பூட்டியுள்ளது. ஐந்தில் நான்கு பாஜக வசம் வந்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற காங்கிரஸ் கட்சிக்கு எந்த மாநிலத்திலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பாஜகவில் மேல் மட்டம் முதல் கீழ் கட்டம் வரை உற்சாகம் கரை புரண்டோடுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலேயே கொண்டாட்டத்துக்கான கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

நேற்று மாலை பிரதமர்
நரேந்திர மோடி
டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் சென்று கொண்டாட்டத்தில் பங்குபெற்றார். இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் டிசம்பர் மாதம் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு கட்சியினரை தயார்படுத்தும் விதமாகவும் இந்த பயணம் அமைந்துள்ளது.

டெல்லியில் நேற்று மாலை பேசிய பிரதமர் மோடி, “இது உற்சாகமான பண்டிகைகளின் நாள். இந்த உற்சாகம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கானது. பெண்களின் சக்தி கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. 2019ஆம் ஆண்டில் நாங்கள் மத்தியில் ஆட்சி அமைத்தபோது, அது உத்தர பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டு பெற்ற வெற்றியால் சாத்தியப்பட்டதாக நிபுணர்கள் சொன்னார்கள். 2022ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் 2024ஆம் ஆண்டு தேசியத் தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் என்று அதே நிபுணர்கள் கூறுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

“ஏழைகள் தங்கள் உரிமைகளைப் பெறும் வரை நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. ஒவ்வொரு ஏழையிடமும் நாம் அவர்களின் பலன்களைச் சேர்ப்போம்” என்று கூறியுள்ளார்.

உபி தேர்தல் முடிவு 2024இல் பிரதிபலிக்க வேண்டும் என மோடி சொல்வதோடு நான் ஓய்வு பெறப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இது குறித்து விளக்கமாக கேட்டோம். “பாஜகவை பொறுத்தவரை 75 வயதுக்கு மேல் பதவிகளில் இருக்க கூடாது என்ற முறையை பின்பற்றுகின்றனர். அதை சொல்லி தான் அத்வானியை ஓரம் கட்டினர். எடியூரப்பா பதவியும் பறிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் வயது தற்போது 71 ஆகிறது. 2024 தேர்தலின் போது 73 வயதாக இருக்கும். ஒருவேளை பாஜக வென்று அவர் பிரதமராக பதவியேற்றால் ஆட்சி காலத்தை முடிப்பதற்கு முன்னரே கட்சி அவருக்கு ஓய்வு கொடுக்கும். அதனால் 2024 தேர்தலில் யோகியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஒரு பேச்சு
ஆர்.எஸ்.எஸ்
வட்டாரத்தில் அடிபட்டது.

குஜராத் முதல்வராக இருந்தவரை பிரதமாராக்கியது போல் உபி முதல்வரை பிரதமராக்கலாம் என்று கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளது. அப்போது பாஜக கட்டாயம் ஆட்சியில் இருக்க வேண்டும் என கணக்கு போடுகிறது. அதுமட்டுமல்லாமல் பிரதமரே காவி உடை அணிந்தவராக இருந்தால் அகண்ட பாரதம் அமைக்கும் வேலையை உற்சாகத்துடன் செய்யலாம் என பேசிக்கொள்கின்றனர். இதனால் தான் மோடி நான் ஓய்வெடுக்கப்போவதில்லை என்று கூறுகிறார். இனிதான் அரசியல் ஆட்டமே இருக்கிறது” என்று ட்விஸ்ட் வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.