`மக்களின் உயிரை காப்பாற்றிய ஹீரோ’ – மோப்ப நாய் சிம்பாவுக்கு 21 குண்டுகளுடன் அரசு மரியாதை

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க மோப்பநாய் படை விரிவுபடுத்தப்பட்டது. இதில் 2013-ம் ஆண்டு மும்பை போலீஸின் மோப்ப நாய் படைப்பிரிவில் சிம்பா என்ற நாய் சேர்க்கப்பட்டது. இந்த நாய் விஐபிக்களின் பாதுகாப்பிலும், வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது.

கடந்த 9 ஆண்டுகளாக மும்பை போலீஸின் மோப்ப நாய் படையில் முக்கிய அங்கமாக விளங்கிய சிம்பா கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை பலனலிக்காமல் சிம்பா உயிரிழந்தது. இதையடுத்து சிம்பாவுக்கு போலீஸார் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்தனர். பரேலில் உள்ள விலங்குகள் மருத்துவமனையில் நடந்த இறுதிச்சடங்கில் 25-க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிம்பாவிற்கு மரியாதை

இதில் 21 குண்டுகள் முழங்க போலீஸார் சிம்பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இது குறித்து மோப்ப நாய் படையில் இடம் பெற்றுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்களது படையில் இடம் பெற்று இருந்த சிம்பாவுக்கு ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. சிம்பா பல முறை வெடிகுண்டுகளை கண்டுபிடித்து ஏராளமானோரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மும்பை போலீஸார் இது தொடர்பாக சமூக வலைத்தளத்திலும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இறுதிச்சடங்கு வீடியோ சமூக வலைத்தளத்திலும் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வீடியோவை லட்சகணக்கானோர் பார்த்துள்ளனர். நெட்டிசன்கள் இறந்து போன சிம்பாவிற்கு சமூக வலைத்தளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்திருப்பதோடு சிம்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதாக தகவல்களை பதிவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.