டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர் – ஸ்ரீகாந்த் உறுதி

ஐபிஎல் முடிந்தவுடன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் சர்வதேச 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 20 ஓவர் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியை வெளியிட்டு வருக்கின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ முன்னாள் தேர்வுக்குழு தலைவராகவும் இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தன்னுடைய அபிப்பிராயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 15 பேர் கொண்ட இந்திய அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் ரிங்கு சிங் இடம்பெறுவார், கட்டாயம் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவருடைய ஆட்டம் சிறப்பாக இல்லாதபோதும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பினிஷர் ரோலுக்கு ரிங்கு சிங் மட்டுமே சரியாக இருப்பார் என அவர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது, ” என்னுடைய கணிப்பின்படி ரிங்குசிங் 20 ஓவர் உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் நிச்சயம் இருக்கிறார். அவருக்கு நடப்பு ஐபிஎல்லில் பேட்டிங் செய்ய அவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அவரது சர்வதேச சாதனையை நீங்கள் பார்க்க வேண்டும். கிடைத்த வாய்ப்புகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தென்னாபிரிக்காவில் சிறப்பாக விளையாடி அற்புதமான சாதனை படைத்தார். இப்படியான வீரர் நிச்சயம் இந்திய அணியில் உலக கோப்பைக்காக விளையாடுவார். அவர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் செல்வார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் அவர் தன்னுடைய விசாவை தயாராக வைத்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இப்போதைய சூழலில் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஜெய்ஷ்வால், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே கன்பார்ம் லிஸ்டில் உள்ளது. எஞ்சிய வீரர்களுக்கான இடத்துக்கு சராசரியாக மூன்று பேர் போட்டியில் இருக்கின்றனர். அதனால், யார் யாருக்கு 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது இப்போது வரை பெரும் புதிராக இருப்பதால் பிசிசிஐ அறிவிப்பை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.