காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது: 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து விவாதம்

புதுடெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த பஞ்சாபில் காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியது.

மொத்தம் மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் எண்ணிக்கை தற்போது இரண்டு மாநிலமாக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

கோப்புப் படம்

கடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தீவிர பிரசாரம் செய்தனர். குறிப்பாக ராகுலை விட பிரியங்காவின் பிரசாரம் மிக அதிகமாக இருந்தது. உத்தரபிரதேசத்தில் மட்டும் பிரியங்கா 160 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

பெண்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பிரியங்கா இவ்வளவு கடினமாக உழைத்தும் காங்கிரஸுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 5 மாநில தேர்தல் தோல்வி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்திப்பது ஏன் என்பது பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கட்சிக்குள்ளும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பிறகு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்கள். காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் ஊட்டும் வகையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தனர்.

இப்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது எதிர்ப்பு குரல் அதிகரித்து வருகிறது. எனவே இந்தக் கூட்டத்தில் இதுபற்றி விரிவான விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.