தனுஷ் காலை வாரிய இரண்டு கார்த்திக்குகள்…

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை மூன்று முறை பெற்றவர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்து இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்றவர் தனுஷ்.

'ஆடுகளம், அசுரன்' ஆகிய படங்களின் மூலம் தனுஷின் இமேஜ் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோரை விடவும் அதிகமாக உயர்ந்தது. நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, தயாரிப்பு என தன்னை பல விதங்களில் சினிமாவில் ஈடுபடுத்திக் கொள்பவர்.

ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த இரண்டு தமிழ்ப் படங்களும், ஒரு ஹிந்திப் படமும் ஓடிடி வெளியீடுகள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் ஓடிடியில் வெளிவந்த 'ஜகமே தந்திரம்', கார்த்திக் நரேன் இயக்கத்தில் நேற்று வெளியான 'மாறன்' ஆகிய இரண்டு படங்களையும் தனுஷ் எப்படி தேர்வு செய்து நடித்தார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தனுஷைப் பொறுத்தவரையில் இயக்குனர்களின் நடிகர் என்று பெயர் வாங்கியவர். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள், கடந்த வருடம் வெளிவந்த 'கர்ணன்' உள்ளிட்ட படங்கள் அதற்கு சாட்சி. இரண்டு கார்த்திக்குகளை நம்பி தன்னுடைய இமேஜை தனுஷ் கெடுத்துக் கொண்டார் என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

கதை தேர்வு, கதாபாத்திரத் தேர்வு ஆகியவற்றுடன் இயக்குனர்கள் பற்றிய தெளிவும் ஒரு நடிகருக்குத் தேவை என்பதை மீண்டும் புரிய வைத்திருக்கிறார் தனுஷ் என்று திரையுலகத்திலும் கிசுகிசுக்கிறார்கள். எத்தனையோ நல்ல கதைகளுடன் கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் அனுபவம் வாய்ந்த இளம் இயக்குனர்களின் கதைகளை இனிமேலாவது தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் கேட்கட்டும் என்ற குரல் கேட்க ஆரம்பித்துவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.