துடைப்பத்தைத் தூக்கிக் கொண்டு தெற்கு நோக்கி ஓடி வரும் ஆம் ஆத்மி.. அதிரடி பிளான்கள்!

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து கட்சியை தென் மாநிலங்களிலும் வலுப்படுத்த
ஆம் ஆத்மி
முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே தென் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது என்றாலும் கூட பெரிய அளவில் அதன் தாக்கம் இல்லை. எனவே தென் மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்த தற்போது அக்கட்சி தீர்மானித்துள்ளது. அதன் முதல் படியாக தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கட்சியைப் பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் பார்தி கூறியுள்ளார். ஆனால் இதில் பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சோம்நாத் பார்தி கூறுகையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே தென் மாநிலங்களிலும் எங்களது கட்சி மீது மக்களுக்கு ஆர்வம் பிறந்துள்ளது. தென் மாநிலங்களில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்களின் வரவேற்பினால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எனவே இங்கு உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தவுள்ளோம்.

கட்சியின் உள்ளூர் மாநிலக் கிளைகள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபடும். தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் , லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும். இந்தியாவின் அரசியலை மாற்ற விரும்பும் யாராக இருந்தாலும் ஆம் ஆத்மியில் சேரலாம். இந்தப் புரட்சியில் அவர்களும் அங்கம் வகிக்கலாம்.

தென் மாநிலங்களில் ஆம் ஆத்மி சார்பில் நடைப்பயணங்களும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று இந்த செயல்பாடுகள் தொடங்கும். முதலில் தெலங்கானாவில் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியாக நடை பயணம் மேற்கொள்ளவுள்ளோம். அப்போது கெஜ்ரிவாலின் அரசியலையும், அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் கொள்கைகளையும் மக்களிடையே பரப்பவுள்ளோம் என்றார் அவர்.

ஆம் ஆத்மி கட்சிக்கு தென் மாநிலங்கள் அனைத்திலும் கிளைகள் உள்ள போதிலும் கூட பாஜக ஆளும் கர்நாடகத்தில் உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தை அது அறிவிக்கவில்லை. மாறாக, பிற கட்சிகளின் ஆட்சி நடந்து வரும் பிற மாநிலங்களில் தனது உறுப்பினர் சேர்க்கையை அது தீவிரப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழத்தைப் பொறுத்தவரை கடந்த லோக்சபா தேர்தலின்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கமல்ஹாசனும் கூட தனது கட்சியைத் தொடங்குவதற்கு முன்பு கெஜ்ரிவாலுடன் ஆலோசனையும் நடத்தியிருந்தார். அவரது கட்சி தொடக்க விழாவில் கெஜ்ரிவாலும் கூட கலந்து கொண்டிருந்தார். ஆனால் கூட்டணி என்று வந்தபோது அது சரியாக வரவில்லை, அமையவில்லை. தொடர்ந்து தமிழகத்தில் அது தனித்தே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.