மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏகள், விஐபிக்கள் உட்பட 122 பிரபலங்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்; முதல்வர் பதவியேற்கும் முன்பே பஞ்சாபில் அதிரடி

சண்டிகர்: முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், விஐபிக்கள் உட்பட 122 பிரபலங்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதால், முதல்வராக பகவந்த் மான் பதவியேற்கும் முன்பே அதிரடிகள் தொடங்கி உள்ளன.  பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. நேற்று  முன்தினம் மொஹாலியில் நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர்  வேட்பாளர் பகவந்த், கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். நவன்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட  வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் வரும் 16ம் தேதி  மதியம் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசிய பகவந்த் மான், மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரை சந்தித்த பின்னர் ராஜ் பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம்  பேசிய பகவந்த் மான், ‘எங்களது கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம்  சமர்ப்பித்தேன். புதிய அரசை அமைக்க உரிமை கோரினோம்; அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். சில நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதை காட்டிலும், பஞ்சாப் மக்களின்ன் பாதுகாப்பு  முக்கியமானது என்று நினைக்கிறேன்’ என்றார். தொடர்ந்து அம்மாநில காவல் துறை இயக்குனர், முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மானை சந்தித்தார். அதன் மாநில காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி உள்ளிட்ட 122 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், விஐபிக்களின் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த பட்டியலில் முன்னாள் முதல்வர்கள் கேப்டன் அமரீந்தர் சிங், பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் பாதல், மாநில காங்கிரஸ் தலைவர் சித்து ஆகியோரின் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.