இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்தது, போர் பாதித்த உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டதில் தாமதம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1 ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், மத்திய பட்ஜெட் மற்றும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்தச் சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் நாளிலேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறார். பின்னர் மதிய உணவுக்குப் பிறகு அதன் மீதான விவாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

image
இதற்கிடையே இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் காங்கிரஸ் எப்படி செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒருமித்த கருத்துக்கொண்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, மக்களுக்கு உகந்த முக்கிய பிரச்னைகளை இந்த இரண்டாவது அமர்வில் எழுப்ப முடிவு செய்திருப்பதாக கூறினார்.
குறிப்பாக உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்களா? பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர்கள் பிரச்னை, மத்திய அரசு வாக்குறுதி அளித்த வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பு ஆகிய விவகாரங்களை எழுப்ப முடிவு செய்திருப்பதாக கூறினார்.

உக்ரைனின் போர் பகுதியில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு தாமதம் காட்டி வந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்தியர்களை மீட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: 2024 நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவுக்கு சாதகமா? சவாலா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.