"சாது" மிரண்டால்.. கல்லை எடுத்து ஒரே வீச்சு.. நொறுங்கிப் போச்சே.. உமா பாரதி ஆவேசம்!

முன்னாள் மத்திய பிரதேச அமைச்சரும், பெண் சாமியாரும், மூத்த
பாஜக
தலைவருமான
உமா பாரதி
, கல்லை எடுத்து மது பாட்டில்களை உடைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில்தான் உமா பாரதியின் இந்த ஆவேசத் தாக்குதலை மக்கள் காண நேரிட்டது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உமா பாரதி கோரி வருகிறார். ஆனால் அரசு மது விலக்கை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில் மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் உமா பாரதி.

இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் குடியிருக்கும் பகுதிகளில்தான் பெரும்பாலான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போபால் நகரில் தொழிலாளர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் கடைகள் அதிக அளவில் உள்ளன. திறந்த வெளியில் மது விற்கிறார்கள். குடிகாரர்களும் திறந்த வெளியிலேயே அமர்ந்து மது குடிக்கின்றனர்.

வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடியிலேயே செலவழிக்கின்றனர் தொழிலாளர்கள். இதனால் பெண்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். மேலும் சாலைகளில் அமர்ந்து இவர்கள் குடிப்பதால், வீதிகளில் செல்லும் பெண்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கூறியிருந்தார் உமா பாரதி.

இந்த நிலையில் ஒரு மதுக் கடைக்கு பாஜகவினர் புடை சூழ வந்தார் உமா பாரதி. கடையை ஒரு வாரத்தில் மூட வேண்டும் என்று கூறி அந்தக் கடையின் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அத்தோடு நில்லாமல் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து கடைக்குள் இருந்து மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷெல்ப்பை நோக்கி ஆவேசமாக வீசினார். அதில் கல் பட்டு சில பாட்டில்கள் உடைந்து நொறுங்கின. சாதுவாக இருந்தாலும் சரியாக குறி பார்த்து பாட்டில்களை உடைத்தார் உமா பாரதி!

ஆனால் உமா பாரதியின் போராட்டங்களுக்கு மாநில அரசு மசிவதாக இல்லை. அங்கு மது விலையைக் குறைத்து புதிய கொள்கை முடிவை மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மதுக் கடைகளில் உள்ளூர் சரக்குகளுடன் வெளிநாட்டு சரக்குகளையும் சேர்த்து விற்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் தற்போது 2544 உள்ளூர் சரக்கு விற்கும் கடைகளும், 1061 வெளிநாட்டு மது விற்பனை நிலையங்களும் உள்ளன.

ஒரே கட்சியைச் சேர்ந்த உமா பாரதி, மாநிலஅரசின் மதுக் கொள்கைக்கு எதிராக போராடி வருவது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கல்லை எடுத்து மதுக் கடையில் அவர் செய்த ரகளை பெரும் பரபரப்பையும் பாஜக தலைமைக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்பு போல பாஜகவில் செல்வாக்குடன் இல்லை உமா பாரதி. இதனால்தான் தனது இழந்த புகழை மீண்டும் பெற இப்படி இறங்கி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.