நிலக்கரிக்கு தட்டுப்பாடு இருக்கிறதா? – மத்திய அரசு விளக்கம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாக சர்ச்சை உருவாகியுள்ள நிலையில், நிலக்கரி உற்பத்தி போதிய அளவில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இன்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மாநிலங்களவையில் அளித்துள்ள ஒரு பதிலில், அனல் மின் நிலையங்களிடம் 26.3 மில்லியன் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். நிலக்கரி உற்பத்தியில் பாதிப்பு இல்லை எனவும், அதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் பொருள்படும்படி அமைச்சரின் பதிலில் புள்ளிவிவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மின்னணு ஏலம் மூலம் 160 மில்லியன் டன் நிலக்கரியை “கோல் இந்தியா” நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக பிரகலாத் ஜோஷி தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். இதிலே 100 மில்லியன் டன் நிலக்கரி ஏலத்தில் எடுக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த பதிலில் விளக்கப்பட்டுள்ளது.
image
“கோல் இந்தியா”  நிறுவனத்தின் சுரங்கங்களில் 45 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரி, விநியோகத்துக்கு இருப்பில் உள்ளதாகவும் அதுமட்டுமின்றி தினசரி உற்பத்தி 2.5 மில்லியன் டன்னாக இருப்பதாகவும் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். சில அனல் மின் நிலையங்கள் தங்களிடம் போதிய நிதி வசதி இல்லாததால் நிலக்கரி வாங்க முடியாத சூழலில் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவே அந்த அனல் மின் நிலையங்களிடம் நிலக்கரி இருப்பு இல்லாததற்கு காரணமாக இருக்கலாம் என்று விவரிக்கும் வகையில் அந்த பதிலில் பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அனல் மின் நிலையங்களிடம் 26.3 மில்லியன் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, மார்ச் எட்டாம் தேதி நிலவரம் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி மற்றும் ஏலம் தொடர்பான புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி, நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மறுத்துள்ளார்.
-கணபதி சுப்பிரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.