இன்றைய பெண்களுக்கு சில நினைவூட்டல்கள் #MyVikatan

மங்கையர் தினம் இனிதே கொண்டாடி முடிக்கப்பட்டது. ஆங்காங்கே மங்கையராகப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற முழக்கங்களும், சாதனைப் பெண்மணி நிகழ்ச்சிகளும் அரங்கேறி முடிந்திருந்தன. சிறப்பு தினம் என்பது இன்று பெருமளவு கொண்டாட்டங்கள் என்று மட்டுமே ஆகிவிட்டது. அதற்கு மங்கையர் தினம் மட்டும் விதி விலக்கல்ல! இந்த தினத்தில் முன்னேறியவர்களைவிட முன்னேறத் துடிக்கும் அல்லது முன்னேற்றம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் அறியாமையில் இருக்கும் பெண்களை கண்டறிந்து கைத் தூக்கி விடுவதே இந்த சமூகத்தின் கடமை மற்றும் பொறுப்பு !!
என்னளவில் கொண்டாட்டங்களை சற்று தள்ளி வைத்து விட்டு பின்வரும் விஷயங்களை சக பெண்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

1. இன்றைய பெண்கள் இரண்டு கேள்விக்கு நடுவில் சிக்கிக் கொள்கிறார்கள். “படித்து விட்டு வீட்டில் சும்மா இருக்கிறாயே” அல்லது “படித்த திமிரில் வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள், கணவரை கவனித்துக் கொள்ளாமல் வேலைக்குச் சென்று வருகிறாயே” என்ற இருமுனைக் கேள்விகளில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் அடைந்த சமூக வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு மூலம் சிறிது படிப்பில் முன்னேறி விட்டோம். ஆனால் சவால் அதற்கு அடுத்து தான் தொடங்குகிறது. வேலைக்கு செல்லலாமா அல்லது வீட்டை கவனித்துக் கொள்வோமா, கற்ற கல்வி மற்றும் திறமையை தொலைத்திடுவோமோ அல்லது திறமையின் பின்னால் வாய்ப்புக்காக ஓடினால் குடும்பம் கை நழுவி விடுமோ என்று அச்சத்திலே காலத்தைக் கடத்துவோம். இந்தக் கேள்விக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு பெண் தனது சுய சம்பாத்தியம் தனக்கான ஒரு பொருளாதார சுதந்திரத்தைத் தரும், அந்தச் சுதந்திரம் நமக்கான நம்பிக்கை மற்றும் தைரியத்தைத் தரும் என்று எண்ணியே ஏதேனும் ஒரு வேலை வேண்டும் என்று நினைக்கிறார்கள். முழுநேரம் இல்லை என்றாலும் தங்களால் பகுதி நேரத்தில், வீட்டில் இருந்தபடியே ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசிக்கிறார்கள். சமூகவலைத்தளம், பத்திரிகை என்று எதிலுமே நமக்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதனை மையப்படுத்தியே ஒரு பெரிய கும்பல் வீட்டில் இருந்தபடியே வேலை என்ற ஒரு பொய்யான வலையில் விழ வைத்து சிறிது பணம் கட்ட வைத்து ஏமாத்திட காத்திருக்கிறது. 90 சதவீதம் நீங்கள் இப்படி பார்க்கும் விளம்பரம் – Work from Home for Ladies – பொய்யானதாகவே இருக்கும். ஆகையால் இதை நன்றாக ஆய்வு செய்தல் அவசியம். மேலும் யாரேனும் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று காலம் தாழ்த்தாமல் தாங்களே வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக, இது வெயில் காலம் – இப்பொழுது வேப்பம்பூ நன்றாக கிடைக்கும். இதனை மதிப்புக்கூட்டல் செய்து ஒரு Product ஆக விற்றால் நல்ல லாபம். தன்னைப் போன்ற ஐந்தாறு பெண்களை வைத்து வத்தல், வடாம் போட்டு விற்றால் தொழில் கற்க தொடங்கி விடலாம்.

Don’t run behind Work From Home Jobs. Instead learn Business!

Woman

2. இன்றைய பெண்களை மையப்படுத்தியே “இன்ஸ்டாகிராம் Influencers” உருவாகி உள்ளார்கள். இதற்கு பின்னால் இருக்கும் வியாபரச் சந்தை மிகப்பெரியது. மாதவிடாய், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு, அழகு குறிப்பு என்று எக்கச்சக்க செய்திகள் நம் முன்னே கொட்டிக்கொண்டே இருக்கும். ஒரு புறம் இவை நன்றாக தோன்றும். நமக்கு தெரியாத விஷயங்களை நிகழ்நிலையில் (Online) கற்றுக்கொள்ளலாம். ஆனால் இதில் எது அசல் எது போலி என்று தெரியாமல் நம் பணத்தை வாரிக் கொட்டுவோம். 5000 கட்டி ஒரு வகுப்பில் சேர்ந்தால் தியானம் செய்ய வேண்டும், நடக்க வேண்டும், நன்றாக தூங்க வேண்டும் உங்களுக்கு குழந்தை நிச்சயம் என்று சொல்வார்கள். இவை அனைத்தும் நமது வீட்டில் பாட்டி , அம்மா, அத்தை சொல்லியவைதாம். அவர்கள் சொல்வதை கேட்காமல் யாரோ ஒருவரது (aesthetic value) அழகாக காட்சிப்படுத்துதலில் மயங்கி காசை இழக்கிறோம். துறைசார் வல்லுநர்களை இந்த விஷயத்தில் பின்பற்றலாம்.

Don’t run behind Instagram Influencers blindly

3. பெண்களுக்கான முக்கிய பிரச்னை அழகு. நாம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணியே நிறைய நேரத்தை விரயம் செய்வோம். குறிப்பாக 30 வயது தாண்டினால் நமக்கு வயதாகிறதோ என்ற அச்சம் தொற்றிக்கொள்ளும். அதை சரி செய்ய பாடுபடுவோம். உண்மையில் வயதாகிறது என்பது எதைக் குறிக்கிறது என்றால் நாம் என்று கற்றலை விடுகிறோமோ, நம்மை (UPGRADE) மேம்படுத்தும் திறன்களை வளர்த்துக்கொள்ளுதலை கை விடுகிறோமோ அன்று தான் நமக்கு முதுமை பிறந்ததாக அர்த்தம். முதுமை என்பது எண்களில் அல்ல நம் எண்ணத்தில்தான். ஆகவே அன்றாடம் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்து ஏதேனும் ஒரு சிறிய விஷயத்தையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கொஞ்ச நேரம் கிடைத்தால்கூட போதும். நிறைய வாசியுங்கள், கேளுங்கள், பழகுங்கள்.

Constantly learn and work yourself to upgrade your niche.

4. இன்றைய பெண்களின் மிகப்பெரிய கோளாறு தனித்துவம். நாம் எதிலும் தனித்துவத்தோடு இருக்க வேண்டும் என்று எண்ணி அடிப்படைகளை கோட்டை விட்டு விடுகின்றனர். பெண்கள் புழங்கும் சமையலையே இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். அன்றாடம் நாம் செய்யும் சாதம், இட்லி, தோசை, சட்னி, சாம்பார் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளாமல் நான் CAKE, Pizza, Burger தான் செய்வேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை. நம் குடும்ப உறுப்பினர்கள் ஒரே ஒரு நாள் தான் இவற்றை சாப்பிட விரும்புவார்கள். ஏனைய நாட்களில் எல்லோரது நாக்கும் நல்லதொரு ரசம் சாதத்தையே கேட்கும். பிள்ளைகள் அம்மாவின் கையால் கிடைக்கும் ஆசையான தயிர் சாதத்தையே விரும்பும். ஆகவே அடிப்படையை சிறப்பாகக் கற்றுக்கொண்டு பின் ஆடம்பரத்தை நோக்கிச் செல்லலாம். இந்த உதாரணத்தை துணி, வீடு, வாழ்க்கைத்தரம் என்று எதிலும் நாம் பொருத்திப் பார்க்கலாம். இங்கே பெண்கள்தான் இவற்றை செய்ய வேண்டுமா என்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அது தனியானதொரு தலைப்பு. பெண்கள் ஆசையோடு செய்யும் பட்சத்தில் இந்த கருத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

Learn the basics then jump to Pro. Don’t run behind uniqueness

5. ஆண்களின் உலகம் மிக விசாலமானது. இங்கே வருத்தத்துடன் நான் ஒன்றை பதிவிட விரும்புகிறேன் முக்கால்வாசி பெண்களின் வாழ்க்கை தங்களது சுயத்தை இழந்து தங்களது குடும்பத்துக்காகவே அர்ப்பணிக்கிறார்கள். ஆனால் அவர்களின் வட்டம் குடும்பம் என்றும் சுயத்துக்கு உள்ளேயே சிக்கிக் கொள்கிறது. இதைத் தவிர்த்து பொதுநலத்தில் பங்குகொள்ள அவர்கள் வெளியே வரவேண்டும். தங்களால் முடிந்த தன்னார்வத் தொண்டுகளை அவர்கள் செய்ய வேண்டும். பணமாக மட்டுமில்லாமல் தங்களது நேரமாகவும், தங்களது சக்தியாகவும் அவர்கள் அத்தொண்டினைச் செய்யலாம் . குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பது, மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு அடிப்படை தகவல்கள் மற்றும் திறன்களை அளிப்பது போன்ற எதுவாயினும் செய்யலாம். –

Donate some time to society in any type of volunteering

மேற்கூறிய ஐந்தும் இன்றைய பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும். இதில் சில கருத்துகள் சிலருக்கு மாறுபட்டும் இருக்கலாம். தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மாற்றத்திற்கான ஒரு பாதையில் நாம் பயணம் செய்வோம்.

– சு.நாக சரஸ்வதி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.