கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை கர்நாடகா அரசு உத்தரவு செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: ‘கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஒரே சீரான சீருடை அணிந்துவர வேண்டும் என்று மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது,’ என்று ஹிஜாப் வழக்கில் கர்நாடக  உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை  விதித்தும், சீருடை அணிந்து வருவதை கட்டாயமாக்கியும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உடுப்பி அரசு முதல்நிலை கல்லூரி  மாணவிகள் சார்பில் தாக்கல் செய்த நான்கு மனுக்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ்  அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ்.தீட்ஷித், காஜி ஜெய்பூனிசா மொஹிதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த மாதம் 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை 11  நாட்கள் இந்த விசாரணை நடந்தது. பின்னர், தீர்ப்பை தேதி  குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இவ்வழக்கின்  தீர்ப்பை தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி அமர்வு நேற்று வழங்கியது.  சுமார் 129 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் தங்கள்  தீர்ப்பில் முற்றிலும் நிராகரித்துள்ளனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ‘ஒரே சீரான சீருடை அணிந்துவர வேண்டும் என்ற  மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் எந்த உள்நோக்கமும் கிடையாது. மாணவ,  மாணவிகள் இடையே ஆடை அணிவதன் மூலம் வேற்றுமை இருக்கக் கூடாது என்ற  நோக்கத்தில் பிறப்பித்துள்ள உத்தரவு சட்டபடியும் தர்மப்படியும் நியாயமானது. மேலும், ஹிஜாப் அணிய வேண்டும் என்பது  இஸ்லாமிய வகுப்பினரின் தனிப்பட்ட விருப்பமே தவிர, இஸ்லாமிய மத  அடிப்படையிலான உரிமை கிடையாது. அரசு  உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி  செய்யப்படுகிறது,’ என கூறியுள்ளனர். இதன் மூலம், கர்நாடகா அரசின் ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. * மேல்முறையீடு செய்ய முடிவு ‘ஹிஜாப்  அணிவது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு எங்களுக்கு அநியாயம் ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை வகுப்பினரை பெரும்பான்மை வகுப்பினர் சட்டம் மூலம் அடிமைப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது.  தனி மனித மத உரிமைகளுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது,’ என கூறியுள்ள உடுப்பி அரசு முதல்நிலை கல்லூரி மாணவி ரேஷ்மா உள்பட 6 மாணவிகள், உச்ச நீதிமன்றதித்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். * தீர்ப்பை ஏற்க வேண்டும் முதல்வர் வேண்டுகோள்கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘மாணவர்கள் இடையே மத வேறுபாடு இல்லாமல், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஒரே சீரான சீருடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றமும் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அனைவரும் தலை வணங்கி ஏற்க வேண்டும். இந்த விவாதத்திற்கு இத்துடன் முடிவு காண வேண்டும்,’ என வலியுறுத்தினார்.* பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் கலவரம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பெங்களூரு, மைசூரு, மங்களுரு, கல்புர்கி, ஷிவமொக்கா, சிக்கமகளுரு, உடுப்பி, தார்வார், கோலார், துமகூரு உட்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் போராட்டங்கள், பொதுக் கூட்டம், ஊர்வலங்கள் நடத்த வரும் 19ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. * தேர்வு எழுத மறுப்புஹிஜாப்  அணிவதற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாதகிரி மாவட்டம், சுராபுரா தாலுகா, கெம்பாவி கிராமத்தில் உள்ள  அரசு முதல்நிலை கல்லூரியில் படித்து வரும் 35 இஸ்லாமிய மாணவிகள் நேற்று  தேர்வு எழுதாமல் திரும்பி சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.