ஹிஜாப் தடை செல்லும் – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மாணவிகளின் தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இது தொடர்பாக அரசாணையையும் அம்மாநில பாஜக அரசு பிறப்பிதத்து. இதற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹிஜாபுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடக
உயர் நீதிமன்றம்
இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல; ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, கர்நாடக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டங்களில் ஈடுபடவோ, போராட்டங்களில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகள் தொடர்பாகவும் கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.