ஹிஜாப் விவகாரம் | உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு: ஜவாஹிருல்லா கருத்து

திருச்சி: ”ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புக்கு முரணானது” என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி பிரதிநிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் திருச்சியில் இன்று நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்த எம்.எச்.ஜவாஹிருல்லா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புக்கு முரணானது. ஹிஜாப் அணிவது கட்டாயக் கடமை அல்ல என்ற சுய விளக்கத்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஹிஜாப் அணிவது முஸ்லிம் சமூகத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இதை வேறொரு தீர்ப்பில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஹிஜாப் என்பது முஸ்லிம் சமூகத்தில் மிக அவசியமானது என்பது திருக்குரானிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹிஜாப் அணிவதென்பது முஸ்லிம் பெண்களின் அடிப்படை கடமை.

அந்த அடிப்படை கடமையை அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், ஹிஜாப் பிற மதத்தினருக்கு எந்த வகையிலும் தீங்கு ஏற்படுத்தக்கூடியது அல்ல. மக்கள் மத்தியில் வேண்டுமென்றே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி, வெறுப்புப் பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முனைகிறது. குறிப்பாக, அடுத்தாண்டு கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள பாஜக அரசுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே, அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பவுமே இதுபோன்று தீர்ப்பு வந்துள்ளது. இதை வெறுப்பு மனப்பான்மையுடன் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே நாங்கள் கருதுகிறோம்.

5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள்தான், விகிதாச்சார அடிப்படையில் அதிக அளவில் பதிவாகியுள்ளன. பாஜகவுக்கு எதிரான மாற்றுக் கொள்கை உடையவர்கள் அனைவரும் தேர்தலில் பிரிந்து நின்றதே பிரச்சினை. பாஜகவுக்கு எதிராக அவர்கள் ஒன்று சேருவதன் அவசியத்தை 5 மாநில தேர்தல் முடிவுகள் வலியுறுத்தியுள்ளன. நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு எதிரான மாற்றுக் கருத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழகத்தில் திமுக தலைமையில் சிறந்த கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியதுபோல, இந்தியா முழுவதும் அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்தப் பயிற்சி முகாமில் மனிதநேய மக்கள் கட்சியின் ப.அப்துல் சமது எம்எல்ஏ, பொருளாளர்கள் தமுமுக என்.ஷபியுல்லாகான், மமக கோவை உமர், தமுமுக- மமக திருச்சி மாவட்டத் தலைவர் எம்.ஏ.முகம்மது ராஜா, பொருளாளர் ஏ.அஷ்ரப் அலி, மாவட்டச் செயலாளர்கள் தமுமுக ஏ.இப்ராகிம், மமக ஏ.பைஸ் அகமது (மாநகராட்சி 28-வது வார்டு உறுப்பினர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.