”அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் மேம்படுத்தப்படும்” – வேலூர் மேயர் சுஜாதா சிறப்புப் பேட்டி

”தனித்து இயங்குவதற்கான முழு திறமையும் பெண்களுக்கு உள்ளது. என் முடிவுகளை நான்தான் தேர்ந்தெடுக்கிறேன். அதில் எனது கணவர் தலையிடுவதில்லை. கட்சியும் தலையிட்டது இல்லை” என்கிறார் வேலூர் மேயர் சுஜாதா.

5 ஆண்டுகளாக ஆசிரியர் பணி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் சுஜாதா, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 31-வது வார்டிலிருந்து பலத்த போட்டிகளுக்கு இடையே மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயராக பதவியேற்றது முதலே பரப்பரப்பாக அதிகாரிகள் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கும் சுஜாதா பேச்சில் பெண்களுக்கான ஆளுமையும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையும் கூடுதலாக வெளிப்படுகிறது. வேலூர் மேயர் சுஜாதாவிடம் ’இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்காக பேசினேன். அந்த உரையாடல், இதோ:

* மேயராக பதவியேற்று ஒரு வாரம் கடந்துவிட்டது. எப்படி இருக்கிறது அனுபவம்..?

“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.பெருமையாக உணர்கிறேன். மேயர் பதவிகளில் நியமிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள். எங்கள் தலைவர் ஸ்டாலின் அத்தகைய பெண்களைத்தான் நம்பிக்கையுடன் மேயர் பதவியில் அமர வைத்திருக்கிறார்.”

* அரசியலில் ஆர்வம் வந்தது எப்படி, உங்கள் குடும்பம் பற்றி…

“நான் எம்.ஏ. பிஎட் முடித்திருக்கிறேன். ஆசிரியராக தனியார் பள்ளியில் பணியாற்றி இருக்கிறேன். 2004-ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் இருக்கிறேன். எங்கள் குடும்பமே திமுகதான். என் தந்தை தீவிர திமுக தொண்டர். திமுக தலைவர்களை கேட்டுத்தான் வளர்ந்தேன். திருமணத்துக்குப் பிறகுதான் நான் அரசியலில் நுழைந்தேன். அரசியலில் கணவர் எனக்கு முழு ஆதரவு அளித்தார். அவரின் தூண்டுதலினால்தான் நான் ஆசிரியரும் ஆனேன்.”

* இம்முறை மேயர்களாக 11 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அது பற்றி…

“பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று வெறும் பேச்சளவில் மட்டுமல்லாமல், எங்களுக்கான அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் எங்கள் கட்சித் தலைமை அளித்துள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த முதல்வர் ஸ்டாலினை நினைத்து பெருமை கொள்கிறேன்.”

உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்…

“சிறுவயதிலிருந்து அரசியல் என்றால் கலைஞர்தான். கலைஞர் கருணாநிதி பிடிக்கும்.”

*பெண் தலைவர்..?

“இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், முதல் பெண் எம்எல்ஏ முத்துலட்சுமி ரெட்டி பிடிக்கும்.”

*வேலூரில் முக்கிய பிரச்சனையாக நீங்கள் பார்ப்பது என்ன? அதற்கான திட்டங்கள்?

“ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வேலூரில் இருந்த தண்ணீர் பிரச்சினையை முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைத்துவிட்டார். அடுத்த முக்கிய பிரச்சினையாக சாலை வசதியின்மை உள்ளது. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் சரி செய்து போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும். அதற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. அடுத்து மக்களுக்கான சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதுதான் தற்போதைக்கான உடனடி தேவை என்று நினைக்கிறேன்.”

அரசியல் தவிர்த்து சுஜாதா என்பவர் யார்?

“அடிப்படையில் நான் ஓர் ஆசிரியர். 5 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி இருக்கிறேன். அதன் பின்னர்தான் அரசியலுக்கு வந்தேன். அரசியலை தவிர்த்து ஆசிரியர் பணி எனக்கு பிடிக்கும். ஆசிரியராகவே என்னை அறிமுக செய்ய விரும்புகிறேன்.”

உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருக்கும் பெண்கள் வெறும் கைப்பாவைகள்தான். அவர்களை இயக்குவது குடும்பத்திலுள்ள ஆண் உறுப்பினர்கள்தான் என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்…

“நிச்சயம் உண்மை இல்லை. தனித்து இயங்குவதற்கான முழு திறமையும்பெண்களுக்கு உள்ளது. என் முடிவுகளை நான் தான் தேர்ந்தெடுக்கிறேன். அதில் எனது கணவர் தலையிடுவதில்லை. கட்சியும் தலையிட்டது இல்லை.”

* அரசியலுக்கு வரும் பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை…

“அரசியல் மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்க வேண்டும். அரசியலை வெறும் பதவியாக பார்க்காமல் மக்கள் சேவையாக பார்க்க வேண்டும்.”

அடுத்த ஐந்து வருடம் மேயராக உங்கள் பயணம் எப்படி இருக்க போகிறது?

“அனைத்து அரசு திட்டங்களும் வேலூர் மக்களை சென்றடைவதை உறுதி செய்வேன். அதிரடி திட்டங்கள் உண்டு. என்னுடைய அரசியல் பயணத்தை நான் கூறுவதைவிட, ஐந்து வருடங்களுக்கு பிறகு மக்கள் கூறுவார்கள்.”

தொடர்புக்கு: [email protected]

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.