உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

மாஸ்கோ:உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு, சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, “ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்து வரும் பேச்சுகளில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்பியது.எனினும், நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், அது தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மாதம் 24ம் தேதி, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, ரஷ்ய படையினர் உக்ரைனுக்குள் நுழைந்தனர்; குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் உக்ரைன் மீதான தாக்குதல்களை துவங்கினர். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள், அதன் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதுவரை, 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கிடையே, உக்ரைனில் இனப்படுகொலை நடந்து வருவதாக குற்றஞ்சாட்டி, சர்வதேச நீதிமன்றத்தில், உக்ரைன் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சர்வதேச நீதிமன்றம், உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, ரஷ்யாவுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையில் நடந்து வரும் இருதரப்பு பேச்சு குறித்து, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று கூறியதாவது:ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள பேச்சுகளில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில உத்தரவாதங்களுக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கும் சூழல் உருவாகி உள்ளது.இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், மறுபுறம் உக்ரைனின் பெரும்பாலான நகரங்களில், ரஷ்ய படைகளின் கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அமெரிக்க பார்லி.,யில் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

ரஷ்யா மீது, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க பார்லிமென்டில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். ரஷ்ய எம்.பி.,க்களுக்கும், ரஷ்ய இறக்குமதிகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். போரால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியாவிட்டால், வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

ஜெலன்ஸ்கி உரையாற்றிய பின், அமெரிக்க எம்.பி.,க்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரை கவுரவித்தனர்.களத்தில் செஞ்சிலுவை சங்க தலைவர்போர் நடந்து வரும் உக்ரைனில், மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் பணிகளில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த சங்கத்தின் தலைவர் பீட்டர் மவுரர், ஐந்து நாள் பயணமாக உக்ரைனுக்கு சென்றுள்ளார்.

தலைநகர் கீவில், மக்களுக்கு உள்ள சவால்கள் குறித்து நேரில் சென்று அறிந்துகொள்ளும் அவர், மனிதாபிமான குழுக்கள் பாதுகாப்புடன் செயல்படுவதை உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.

இத்தாலியில் 47 ஆயிரம் அகதிகள்

உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு, உக்ரைனில் இருந்து இதுவரை, 47 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கான அகதிகள் முகாமை கட்டமைக்கும் பணிகளில், இத்தாலி அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

உக்ரைனுக்கு துபாயில் இருந்து உதவிஉக்ரைனுக்கு, உலக நாடுகள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, இலவசமாக ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை, உக்ரைனுக்கு இரண்டு சிறப்பு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை, போலந்து எல்லைப் பகுதி வழியாக உக்ரைனுக்கு அனுப்பப்பட உள்ளன.

பாதுகாப்பாக திரும்பிய பிரதமர்கள்

போர் நடந்து வரும் உக்ரைனுக்கு, நேற்று முன்தினம் சென்ற போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா நாடுகளின் பிரதமர்கள், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினர். உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் சென்ற அவர்கள், நேற்று பாதுகாப்பாக, போலந்து எல்லைக்கு திரும்பினர். இதை, போலந்து அரசு உறுதிபடுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.