ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் – உச்சக்கட்ட சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் இன்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. தலைநகர் டோக்கியோ உட்பட பல நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் காணப்பட்டது. ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது. 

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

20 லட்சம் வீடுகளில் மின்தடை

புகுஷிமா பகுதியில் இருக்கும் கடலில் சுமார் 60 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு உடனடி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்நாட்டின் நேரப்படி இரவு 11.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். தற்போது வரை சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சில கடல் பகுதிகளில் மட்டும் ஒரு மீட்டர் வரை அலைகள் எழும்பின அதேநேரத்தில் சுமார் இரண்டு மில்லியன் வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். 

ஃபுகுஷிமா அணுமின் நிலையம் 

புகுஷிமா அணுமின் நிலையம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அப்பகுதி மிகுந்த சேதத்தை எதிர்கொண்டது. அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 9.0 ஆக ரிக்டர் அளவுகோளில் பதிவாகியிருந்தது. அப்போது எழுந்த ஆழிப்பேரலையில் சுமார் 19,000 பேர் உயிரிழந்தனர். புகுஷிமா அணுமின் நிலையமும் பலத்த சேதமடைந்து, கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது.

ஜப்பானில் ஏன் அதிக நிலநடுக்கம் ஏற்படுகிறது?

நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் ஜப்பான் உள்ளது. இது பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் பகுதியில் விழுகிறது. அதன் தாக்கம் எவ்வளவு என்றால், ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் சிறியதும் பெரியதுமாக 100க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

நெருப்பு வளையம் மற்றும் டெக்டோனிக் தட்டுகள் என்றால் என்ன?

ரிங் ஆஃப் ஃபயர் என்பது பல கண்ட மற்றும் கடல்சார் டெக்டோனிக் தட்டுகள் உள்ள ஒரு பகுதி. இந்த தட்டுகள் மோதும் போது நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி மற்றும் எரிமலைகள் வெடிக்கும். இந்த நெருப்பு வளையத்தின் தாக்கத்தை நியூசிலாந்து முதல் ஜப்பான், அலாஸ்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா வரை காணலாம். உலகின் 90% நிலநடுக்கங்கள் இந்த ரிங் ஆஃப் ஃபயர் பகுதியில்தான் ஏற்படுகின்றன. இந்த பகுதி 40 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. உலகில் செயல்படும் எரிமலைகளில் 75% இந்தப் பகுதியில்தான் உள்ளன. இந்த நெருப்பு வளையத்தில் 15 நாடுகள் உள்ளன.

மேலும் படிக்க | ஸ்டைலாக ‘தம்’ அடிக்கும் நண்டு..! என்னமா புகை விடுது..! வைரல் வீடியோ!

ரிங் ஆஃப் ஃபயர் விளைவு எத்தனை நாடுகளில் உள்ளது?

ஜப்பான், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து, அண்டார்டிகா, கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, குவாத்தமாலா, கோஸ்டாரிகா, பெரு, ஈக்வடார், சிலி, பொலிவியா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.