`ஆங்ரி பேர்டு' எனச் சொல்வதே தப்புதான்; ஏன் தெரியுமா? – பறவை சூழ் உலகு – 3

மனிதன் கொக்குகளுடன் இணைந்து பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறான் என்பதை கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு சான்றாக சில சொலவடைகளையும் கொடுத்திருந்தேன். அதற்கு மேலம் வலு சேர்க்கும் விதமாக கொக்கைப் பற்றி திருவள்ளுவரும் பாடியுள்ளார், கொக்கின் குணத்தை கீழ்கண்ட குறளில் எடுத்துக் கூறியுள்ளார்.

‘கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.’

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல் அமைதியாக இருக்க வேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

கொக்கானது தனது ஈட்டி போன்ற அலகை வைத்து சட்டென்று மீனை கொத்திப் பிடித்து, பிடித்த மீனை மேலே சுண்டி சாதுர்யமாக விழுங்கும் காட்சி அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

கரை கொக்கு

கொக்கு குறித்து பேசும்போது எனக்கு சிறிய வயதில் விளையாடிய ஒரு விளையாட்டு நியாபகம் வருகிறது. சிறுவர்கள் அனைவரும் வட்டமாக அமர்ந்து கொண்டு கைகளை தரையில் மட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். கூட்டத்தில் ஒருவர் விளையாட்டை ஆரம்பிப்பார். கொக்கு பற பற, கோழி பற பற, காக்கா பற பற என்று பல பறவைகளின் பெயரைச் சொல்லுவார்கள். பறவைகளின் பெயரைச் சொல்லும்போது கை விரல்களை மட்டும் விரித்து மேலும் கீழும் அசைக்க வேண்டும். பறவைகள் அல்லாமல் வேறு பெயரைச் சொன்னால் கையை அசைக்கக் கூடாது.

கொக்குப் பற பற, காக்கா பற பற, வக்கா பற பற, மைனா பற பற, வாத்து பற பற, வாத்து முட்டை பற பற, காக்கா சின்னபாண்டி பற பற, தாரா கோழி தாத்தா பற பற என்று சிரித்து சிரித்து மகிழ்ச்சியாக விளையாடுவோம். இந்த விளையாட்டின் மூலம் நம்மோடு இணைந்து வாழ்ந்த பல பறவைகளின் பெயர்கள் நமக்கு தெரிந்தது. ஆனால் தற்போதைய தலைமுறைக்கு இது போன்ற விளையாட்டுக்கள் தெரிவதில்லை. இந்த வருடம் ஜனவரி மாதம் பறவைகள் கணக்கெடுப்பிற்காக திருநெல்வேலி அருகில் உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்திற்கு சென்றிருந்தேன். அப்போது குளத்துக் கரையில் உள்ள ஆல மரத்தடியில் நான்கைந்து சிறுவர்கள் ஆளுக்கொரு செல்போன் வைத்துக் கொண்டு தூரதூரமாக அமர்ந்திருந்தார்கள்.

சாம்பல் நாரைகள்

சிறுவர்களிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது, மொபைலில் ஆங்ரி பேர்ட்ஸ் (Angry Birds) விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் தலைக்கு மேல் பட்டம் பறப்பதுபோல் தென்பட்டது. என்னெவென்று மேலே பார்த்தால் ஒரு வேதிவால் குருவி பறந்து சென்றது. பறவைகள் மனிதர்கள் போல தேவையில்லாமல் ஒரு காலமும் சினம் கொள்ளாது; கோபம் கொள்ளாது. ஆண் பறவைகள் பெண் பறவைக்காக ஒன்றையொன்றை சண்டையிட்டு கொள்ளும். குஞ்சு அடைகாக்கும்போது பக்கத்தில் சென்றால் தற்காப்புக்காக கொத்த வரும். மற்றபடி கோபம் கொண்டு மனிதர்களையோ, பிற உயிரினங்களையோ தாக்க வராது. கோபம், பொறாமை இவையெல்லாம் மனிதனுக்கே உரியவை. இல்லாத பேயை குழந்தைகளிடம் சொல்லி வளர்ப்பதுபோல், ஆங்ரி பேர்ட்ஸ் என்ற பெயரில் குழந்தைகளிடம் பறவைகளைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் பரப்பப்படுகின்றன. அந்த இடத்தில் உங்களுக்கு மேலே வேதிவால் குருவி பறக்கிறது. அதைப் பாருங்கள் என்று சொல்லி என்னிடம் இருந்த சில பறவைகள் குறித்த சிறு கையேட்டை கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

சரி… இப்போது கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக இன்று மூன்று வகையான கொக்குகள் குறித்து பார்க்கலாம்.

கரைக் கொக்கு (Western Reef-egret)

நாணல் நாரை, கழி நாரை, பாறைக் கொக்கு என்ற வழங்கு பெயர்களும் உள்ளன.

பண்புகள்: பெரும்பாலும் கடற்கரையோரங்களில் ஆழம் குறைவான பகுதிகளில் அசைவின்றிக் காத்திருந்து இரையை குத்திப் பிடிக்கும்.

இரு வண்ணங்களில் இருக்கும். வெள்ளை மற்றும் நீலம் கலந்த சாம்பல் நிறப் பறவையின் தொண்டை வெள்ளை நிறமானது. இனப்பெருக்கக் காலத்தில் இரண்டு மென் தூவிகள் உச்சந்தலையில் காணப்படும்.

வெள்ளை வண்ண கரை கொக்கு

மார்ச் – ஜுலை மாதங்களில் அலையாத்திக் காடுகளில் உள்ள மரங்களில் இனபெருக்கத்தை நிகழ்த்தும்.

கடற்கரை மட்டுமல்லாது ஊர்ப்புற குளங்கள், ஏரிகள், கண்மாய்களிலும் கரைக் கொக்கை காண முடியும். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் குளத்தில் மறுகால் தண்ணீர் வெளியேறும் பகுதியில் இந்தக் கொக்கினை நண்பர் தாமஸ் மதிபாலன் அவர்கள் 2012-ம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பின்போது எனக்கு காண்பித்தார்.

சம்பு நாரை (Purple Heron)

செந்நாரை, செந்நீலக் கொக்கு என்ற வழங்கு பெயர்களும் இக்கொக்கிற்கு உள்ளது.

பண்புகள்: அடர்ந்த மிதக்கும் தாவரங்களின் ஊடே கருக்கல் வேளைகளில் இரை தேடும்.

முதுகு ஊதா கலந்த சாம்பல் நிறமானது. வயிறு மற்றும் இறக்கைகளின் அடிப்பகுதி கரும்பழுப்பு நிறமானவை. நீண்டு மெலிந்த கழுத்தில் பழுப்பு மற்றும் கருநிறக் கீற்றுகள் காணப்படும்.

ஜுன் – மார்ச் மாதங்களில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும். மரங்கள் மற்றும் நாணல் படுகைகளில் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும்.

சம்பு நாரை

திருநெல்வேலி பக்கத்தில் இதனை ஜம்பு அல்லது சம்பு நாரை என்றழைப்பார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊர்க் குளங்களில் சம்புக் கோரை தாராளமாக வளர்ந்து நிற்கும்.

இந்த நாரையை சம்புகளின் ஊடே பார்க்க முடியும். ஆனால் தற்போது சம்புக் கோரைகள் குறைந்து நெய்வேலி காட்டாமணக்கு போன்ற வேற்று தாவரங்கள் பரவி வருகின்றன. நெல் வயல்களில் பயன்படுத்தப்படும் அதிக அளவிலான ராசயன உரங்கள் நிறைந்த தண்ணீர் வயல்களிலிருந்து கசிந்து ஓடைகளின் வழியே ஆற்றிலும் குளத்திலும் கலக்கிறது. இதுதான் இந்த நெய்வேலி காட்டாமணக்கு போன்ற வேற்று தாவரங்கள் பரவ முக்கிய காரணமாக உள்ளது.

பறந்து செல்லும் சாம்பல் நாரை

சாம்பல் நாரை (Grey Heron)

நாராயணப் பட்சி, சாம்ப கொக்கு, நதியன், கொய்யடி நாரை, கருநாரை போன்ற வழங்கு பெயர்களும் இதற்குண்டு.

பண்புகள்: திறந்தவெளி நீர்நிலைகளில் இரை தேடும்.

உயர்ந்து மெலிந்த இந்த நாரையின் உடல் சாம்பல் நிறமானது. நீண்ட வெண்ணிற கழுத்தில் கரும்புள்ளிகள் காணப்படும், கூரிய அலகு கறுப்பு அல்லது மஞ்சள் நிறமானது.

நவம்பர் – மார்ச் மாதங்களில், மரங்களில் மற்ற பறவைகளுடன் சேர்ந்து கூடுகட்டும்.

சாம்பல் நாரை (Grey Heron)

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள நயினார் குள மேற்குக் கரையில் பத்துக்கும் குறைவான பனை மரங்கள் உள்ளன. இந்த பனை மரங்களில் சாம்பல் நாரை கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து வருவதை கடந்த பத்து வருடங்களாக பார்த்து வருகிறேன். குப்பைகளின் கூடாரமாகவும் சாக்கடை நீர்த் தேக்கமாகவும் திறந்தவெளி மதுபான அருந்துமிடமாகவும் இந்தக் குளம் தற்போது மாறிவிட்டது என்பது மனதிற்கு வேதனையாக உள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளமும் இது போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தற்போது மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் இணைந்து குளத்தில் நிலவும் சூழல் மாசுபாட்டை குறைக்க ஆவன செய்து வருகிறார்கள். தற்போது குளம் ஓரளவு சீராகியுள்ளது. இதுபோன்ற முயற்சி நயினார் குளத்திலும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

படங்கள் மரு. குரு சங்கர், ஹர்சினி, வினோத்குமார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.