ஒரே ஒரு வீடியோ அழைப்பு… 800 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய பிரித்தானிய நிறுவனம்


பிரித்தானியாவில் P&O படகு நிறுவனம் ஒரே ஒரு வீடியோ அழைப்பில் 800 ஊழியர்களை வேலையில் இருந்து அதிரடியாக நீக்கிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அடுத்த சில நாட்களுக்கு சேவையையும் ரத்து செய்துள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
P&O படகு நிறுவனத்தின் இந்த துரோக நடவடிக்கை பயணிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,
தொழிற்சங்கத் தலைவர்கள் ஊழியர்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டியதாகவும், படகில் இருந்து இறங்க வேண்டாம் என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய 800 ஊழியர்களுக்கும் வெறும் 5 நிமிடமே கால அவகாசம் அளித்து, P&O படகு நிறுவனம், வீடியோ அழைப்பில் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

பதிலுக்கு, குறைவான ஊதியத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த P&O படகு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த களேபரங்கள் அடங்கும் வரையில், அடுத்த சில நாட்களுக்கு படகு சேவை இருக்காது எனவும் P&O படகு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் இருந்து இறங்க மறுக்கும் ஊழியர்களை, தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களை அனுப்பி மிரட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழப்பை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள P&O படகு நிறுவனம், தேவைக்கு அதிகமான ஊழியர்களை மட்டுமே வேலையில் இருந்து நீக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மொத்தமுள்ள 20 படகுகளில் 3,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய சூழலில் தொழிலை முன்னெடுத்து செல்வது கடினமான விடயம் என குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள், விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதைப் பொறுத்து தான் நமது எதிர்காலம் எனவும், இந்த மாற்றங்கள் இல்லாமல் P&O படகு சேவை நிறுவனத்திற்கு எதிர்காலம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

P&O படகு சேவை நிறுவனமானது ஆங்கிலக் கால்வாய், வட கடல் மற்றும் ஐரிஷ் கடல் வழியாக வருடத்திற்கு 30,000 பயணங்களை முன்னெடுத்து வருகிறது.
மேலும், அடுத்த சில நாட்களுக்கு கப்பல் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.