உயிரினங்கள் தோன்றியது எப்படி? கடலில் 20,000 அடி ஆழத்தில் ரகசியம் தேடும் விஞ்ஞானிகள்: வேற லெவலுக்கு போகிறது இந்தியா

புதுடெல்லி: உலகில் உயிரினங்கள் உருவான ரகசியத்தை அறிய, கடலுக்கு அடியில் 20 ஆயிரம் அடி  ஆழத்துக்கு சென்று இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்த உள்ளனர். பல்வேறு துறைகளில் இந்தியா தனது ஆராய்ச்சியை விரிவுப்படுத்தி வருகிறது. நிலவுக்கு விண்கலனை அனுப்பி ஆராய்ச்சி செய்து வரும் அது, தற்போது ஆழ்கடலில் 6 கிமீ ஆழத்துக்கும் சென்று உயிரினங்கள் தோன்றிய ரகசியத்தை கண்டறியும் அடுத்த முயற்சியில் ஈடுபட உள்ளது.இது குறித்து ஒன்றிய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிசந்திரன் கூறுகையில், ‘‘உயிரினங்களின் தோற்றம் குறித்து பல்வேறு மர்மங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடலில் 4 கிமீ முதல் 5 கிமீ ஆழத்தில் இருந்துதான் உயிரினங்கள் தோன்றியதாக சில ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளன.4 முதல் 5 கிமீ வரை ஆழத்தில் முழுவதும் இருட்டாக இருக்கும். ஆனால், அங்கும்  உயிரினங்கள் வாழ்கின்றன. அத்தனை அடி ஆழத்தில் உயிரினங்கள் எப்படி பிறக்கின்றன. அவை எவ்வாறு வாழ்கின்றன போன்றவை குறித்து  ஆழ் கடல் ஆய்வின் மூலம் தெரியவரும்.  ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக ரூ.4,077 கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கடலின் 500 மீ ஆழத்துக்கு இந்திய விஞ்ஞானிகள் சென்று ஆய்வில் ஈடுபடுவார்கள்,’’ என்றார்.ஆழ்கடலில், 6,000 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில், உயிரினம் அல்லாத பாலி மெட்டாலிக் மாங்கனீஸ் கோபால்ட் போன்ற  பல தாது வளங்கள் உள்ளன.  இந்த ஆராய்ச்சியின் மூலமாக  கனிம வளங்களை எதிர்காலத்தில் வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகலாம். இதன் மூலம், ஆழ்கடல் வளங்கள் ஆராயப்பட்டு நிலையான பயன்பாட்டுக்கான ஆழ்கடல் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.  ஆழ் கடல் ஆராய்ச்சிக்கான தொழில்நுட்பங்கள் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை.  வர்த்தக ரீதியாக எளிதில் கிடைக்காது.  முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளுடன் இணைந்து இதற்கான புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.  கடலுக்கு அடியில் பயன்படுத்துவதற்கு தொலைபேசிகள், ஆராய்ச்சி கலன்கள் ஆகியவை இதில் அடங்கும்,’ என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.