மாஸ்கோ பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் புதின்- உக்ரைனில் போர் புரியும் ரஷிய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு

மாஸ்கோ:
உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் போர் 24 வது நாளாக தொடரும் நிலையில், மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. 
உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை, போர் மூலம் ரஷியா இணைத்துக் கொண்டதன் எட்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த பொதுக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுக் கூட்டம் நடைபெற்ற லுஷ்னிகி மைதானம் மற்றும் அதைச் சுற்றிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்ததாக மாஸ்கோ போலீசார் தெரிவித்துள்ளனர். 
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் பல்வேறு நாடுகளில் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இந்த போருக்கு ரஷிய மக்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அரசு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய ரஷிய அதிபர் புதின்,  உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷிய ராணுவ வீரர்களை பாராட்டினார்.  உக்ரைனில் உள்ள தனது எதிரிகள்  நவ நாஜிக்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இனப்படுகொலையை தடுக்க உக்ரைன் மீது போர் நடவடிக்கை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ரஷிய தேசபக்தி பாடல்கள் இடம் பெற்ற கலை நிகழ்ச்சியும் பொதுக் கூட்ட மேடையில் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.