குற்றவாளிகளை அடையாளம் காண உயிரியல் மாதிரிகளை எடுக்க வழி செய்யும் குற்றவியல் நடைமுறை மசோதாவுக்கு எதிர்ப்பு!!

டெல்லி : குற்றவாளிகளை அடையாளம் காண உயிரியல் மாதிரிகளை எடுக்க வழி செய்யும் குற்றவியல் நடைமுறை மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் குற்றவியல் நடைமுறை மசோதாவை தாக்கல் செய்து பேசிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, புதிய சட்டம் அமலுக்கு வந்தால் விசாரணை அமைப்புகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். மேலும் வழக்கு விசாரணை விரைவாக முடிய வழி ஏற்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மேலும் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் மீதான தீர்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அஜய் மிஸ்ரா தெரிவித்தார். மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அனைவரின் உயிரியல் மாதிரிகளை எடுக்க வகை செய்யும் குற்றவியல் நடைமுறை மசோதா, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது, ‘குற்றம் சாட்டப்பட்ட நபரே அவருக்கு எதிரான சாட்சியாக மாற கட்டாயப்படுத்தக் கூடாது. அனுமதி இல்லாமல் உண்மை கண்டறியும் சோதனை, மூளை வரைபட சோதனை, நார்கோ அனாலிசிஸ் போன்றவற்றை நடத்துவது சட்ட விரோதமானது. இது பற்றி அரசியலமைப்பு சட்டம் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளது,’என்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு எழுந்ததால் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை தாக்கல் செய்ய நேர்ந்தது. தற்போதுள்ள குற்றவியல் நடைமுறை சட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்கள் ஆகியோரின் கைவிரல் மற்றும் கால் தடம் ஆகிய பதிவுகள் மற்றும் புகைப்படங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்த புதிய மசோதாவின் விதிகளின்படி எந்த ஒரு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு நபரும் போலீஸ் அதிகாரிக்கு கை, விரல், கால் தடம் போன்ற பதிவுகளை வழங்க வேண்டும். கைவிரல் பதிவு, உள்ளங்கை அச்சுப்பதிவு, கால்தடம் பதிவு, புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல், உயிரியல் மாதிரிகள் மற்றும் கையெழுத்து உட்பட நடத்தை பண்புகளை சேகரிக்க காவல்துறைக்கு அனுமதி அளிக்க வழிவகை செய்யும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.