பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை திரும்ப பெற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.ஐந்து மாநில தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 6வது முறையாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இவ்விவகாரம் நாடாளு மன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்களவையில் நேற்று பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்திய எதிர்க்கட்சியினர், இப்பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் அனுமதி கோரினர். ஜீரோ நேரத்தின் போது, மக்களவை திமுக தலைவரும் எம்பி.யுமான  டிஆர். பாலு பேசிய போது, “கடந்த  ஒரு வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹4 அதிகரித்திருப்பது அதிர்ச்சி  அளிக்கிறது. தேர்தலின் போது, பெட்ரோல், டீசல் விலையில் 50 சதவீதத்தை  குறைப்பதாக கூறிய பிரதமர் மோடி தற்போது மவுனமாக இருக்கிறார். கடந்த ஒரு  வாரமாக நாடு முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல்  கலால் வரி மூலம் ஈட்டிய பணத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தது  போல ₹10 லட்சம் கோடியை மானியமாக விடுவித்து, பெட்ரோல், டீசல் விலையை  கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், பழைய முறையை அமல்படுத்த  வேண்டும்’’ என்று தெரிவித்தார்.பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தாமல் ஒன்றிய அரசு அவையில் பயந்து ஓடுகிறது என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், உக்ரைன் போர் விவகாரம் மற்றும் எரிபொருட்கள் விலை உயர்வு குறித்து மக்களவையில் அடுத்த வாரம் விவாதம் நடத்த ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். ஆனால், எந்த தேதியில் விவாதம் நடக்கும் என கூறப்படவில்லை.அதே போல, மாநிலங்களவையிலும் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, தொழிற்சங்கத்தினரின் நாடு தழுவிய போராட்டம், பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளிக்க எதிர்க்கட்சியினர் அனுமதி கோரினர். இதற்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி வழங்கவில்லை. இதற்கு, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.ஏழைகளின் நலன் புறக்கணிப்புமக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன், “ஒன்றிய அரசின் பட்ஜெட் சாமானிய மக்களின் சுமையை குறைப்பதில் தோல்வி அடைந்து விட்டது. நாட்டின் கடைக்கோடி மக்களான ஏழைகளின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வினால், அனைத்து வகையிலும் தொடர் விலைவாசி உயர்வு ஏற்படும். மக்களுக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பு அளிப்பதே பட்ஜெட்டின் நோக்கமாகும். ஆனால் இந்த பட்ஜெட்டில் இதற்கான நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. அரசு பணக்காரர்கள், வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றியே பேசுகிறது. துயரப்படும் மக்களுக்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது,’’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.