1500 தியேட்டர்கள், 100க்கும் மேற்பட்ட நகரங்கள் – PVR, INOX இணைப்புக்கு ஓடிடி வளர்ச்சிதான் காரணமா?

இந்தியா முழுவதும் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளை இயக்கிவரும் PVR Ltd, Inox Leisure Ltd. என்ற இரண்டு முன்னணி நிறுவனங்களின் இணைப்பு குறித்த செய்தி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு, கோவிட் பெருந்தொற்றால் திரையரங்குகள் காற்று வாங்கிக் கொண்டிருந்த போதே தொடங்கி இருக்கிறது. இந்நிறுவனங்கள் வணிக ரீதியாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில் இணைப்பு குறித்த சாதக பாதகங்கள் அப்போதிருந்தே அலசப்பட்டன.

இந்தியா முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் உண்டு. இந்த இணைப்பால் இனி புதிதாகத் தொடங்கவிருக்கும் திரையரங்கங்களுக்கு ‘PVR Inox’ என்று பெயரிட இருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் திரையரங்களில் அந்தந்த பெயரிலேயே செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

PVR தியேட்டர்

மல்டிப்ளக்ஸ் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களான PVR, Inox, Carnival, Cinepolis ஆகியவற்றில் PVR, Inox இணைந்தால் 50% க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஒரே குடையின் கீழ் வரும். இந்த இணைப்பு குறித்து பங்குச்சந்தை, SEBI உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. PVR தலைவர் அஜய் பிஜ்லி இந்த இணைந்த நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராக பொறுப்பு வகிப்பார் என்றும் INOX குழுமத் தலைவர் பவன் குமார் ஜெயின் நிர்வாகம் சாராத சேர்மேன் (Chairman) ஆகவும் சஞ்சீவ் குமார் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்க உள்ளனர்.

வருடந்தோறும் புதிதாக 200 புதிய திரைகளுக்கு சேவையை விரிவடைய செய்யவுள்ளதாக அஜய் பிஜிலி தெரிவிக்கிறார். இந்த இணைப்பு முடிவதற்கு 6-9 மாதங்கள் வரை எடுக்கலாம் எனவும் தெரிகிறது. சீனாவோடு ஒப்பிட்டு நமது நாட்டில் மிகக்குறைவாகவே திரையரங்குகளில் முதலீடு செய்யப்படுவதாகச் சொல்லும் அஜய், தற்போது இருக்கும் 109 நகரங்களைத் தாண்டி 200-300 நகரங்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

INOX திரையரங்கம்

இதனிடையே ஓடிடி-களின் வளர்ச்சியே இந்த இணைப்புக்கான முக்கியக் காரணம் என வணிகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஓடிடி-களின் வருகையால் இனி மக்களைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு நவீன தொழில்நுட்பங்களின் உதவி தேவைப்படுகிறது. அப்படியான விலை மதிப்புள்ள டெக்னாலாஜியை கொண்டுவர, நிறுவனங்களின் கூட்டு முயற்சி அவசியமாகிறது. அத்தகைய ஒரு முயற்சிதான் இதுவும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.