உடன் பிறப்புகளின் உணர்வையும் குழைத்து உருவாக்கப்பட்ட மாளிகை ‘டெல்லி அறிவாலயம்’! ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இயக்கத்தின் கொள்கையையும், உடன் பிறப்புகளின் உணர்வையும் குழைத்து உருவாக்கப்பட்ட மாளிகை ‘டெல்லி அறிவாலயம்’ என திமுக தொண்டர்களுக்கு, திமுக தலைவரும் முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தெற்கின் வரலாற்றை டெல்லிப் பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதாடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,  வானத்தில் சிறகடிக்கும் பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அது தன் கூட்டுக்குத் திரும்பும் போதுதான் பெரும் மகிழ்ச்சி கொள்ளும். பாடுபட்டுச் சேகரித்து வந்த இரையைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவதில்தான் பறவைக்குப் பேருவகை.

அதுபோல, 5 நாட்கள் அமீரகத்திற்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களின் தனிப்பாசத்திலும் பேரன்பிலும் மூழ்கித் திளைத்து திணறி திக்கு முக்காடி, அந்நாட்டு அரசு சார்பிலான அன்பு கனிந்த மரியாதையைப் பெற்று, துபாய் அபுதாபி தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு, தாய்மண்ணாம் தமிழ்நாட்டிற்கு அதிகாலையில் வந்திறங்கியபோது, சிறகடித்து முடித்துக் கூடு திரும்பும் தாய்ப் பறவையின் உணர்வினைப் பெற்றேன்.

பள்ளி விழாவில் கலந்து கொண்டு கைத்தட்டல்களையும் பாராட்டுதல்களையும் விருதுகளையும் பெறுகிற குழந்தை, வீடு திரும்பி அவற்றை தாயின் கைகளில் அளித்து, அம்மாவின் அன்பு முத்தங்களைப் பெற்று மகிழ்வதுபோல, 14ஆயிரத்து 700பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய, 6ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் குறித்து ஊடகங்கள் வாயிலாக, தாயுள்ளம் கொண்ட தமிழ்நாட்டு மக்களிடம் தெரிவித்து மகிழ்ந்தேன்.

முதல்-அமைச்சர் என்ற முறையில் முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அரசியலுக்காக ஒரு சிலர் அதை ஏற்காமல், அழுக்காறு மேலிட்டு, வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பினாலும், அவர்களின் மனசாட்சிக்கும் உண்மை நிலவரம் நன்றாகவே தெரியும். வெற்றியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டால், பிறகு எப்படி அவர்கள் அரசியல் கடை போட்டு, கூவிக்கூவி பிழைப்பு நடத்த முடியும்?

அவர்களால் பாராட்ட முடியாவிட்டாலும், நடுநிலை பத்திரிகைகள், ஊடகங்கள் பாராட்டுகின்றன. துபாயில் வெளியாகும் ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆங்கில ஊடகங்கள் பலவும் இந்தப் பயணத்தைப் பதிவு செய்துள்ளன. அமீரகத்தில் மேற்கொண்ட 5 நாள் பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ‘தினத்தந்தி’ ஏடு படம் பிடித்துக் காட்டும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

“இதுவரை எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும், தலைவர்களும் துபாய்க்கு வந்தபோதுகூட இல்லாத வரவேற்பு ஒரு மாநிலத்தைச் சேர்ந்த முதல்- அமைச்சருக்குக் கிடைத்து இருப்பது அனைவரையும் பிரமிக்கச் செய்துள்ளது. நாட்டின் தலைவர்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்திருப்பது வியக்க வைத்திருக்கிறது. ‘நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உலகத் தமிழர்கள் அனைவரும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஒன்றுகூடியதால் துபாய் ஸ்தம்பித்துப் போனது என்றே சொல்லலாம். அந்தளவு தமிழர்கள் வெள்ளமெனச் சூழ்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தனர். அதே வேளையில், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்ப்பதற்காக ஏராளமான அரேபியர்களும், தொழில் அதிபர்கள், வணிக நிறுவனப் பிரதிநிதிகள் என அனைவருமே திரண்டனர்.

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சருக்கு இப்படி ஒரு வரவேற்பா? யாருப்பா இவரு? என்ற கேள்வியை துபாய் அரச பிரதிநிதிகள் அனைவருக்குமே தமிழர்களின் உற்சாகம் எழச் செய்தது” எனத் தினந்தந்தி பதிவிட்டுள்ளது. எனக்குக் கிடைத்த இந்த வரவேற்பும் பெருமையும் எனக்காகக் கிடைத்தது என்று கர்வம் கொள்ளும் மனநிலை எனக்கு எப்போதும் கிடையாது. என்னை முதல்-அமைச்சராக்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும், இயக்கத்தின் முதன்மைத் தொண்டனான என்னைத் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டிருக்கிற கழக உடன்பிறப்புகளுக்கும் கிடைத்த பெருமை இது என்பதை மனதில் கொண்டே செயல்படுகிறேன்.

‘இந்தியாவின் நம்பர் 1 முதல்-அமைச்சர்’ என்பதைவிட, இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்குவதே உங்களில் ஒருவனான எனது இலக்கு. அதற்கான பயணம் அயர்வின்றித் தொடரும், தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வகுத்தளித்த லட்சியப் பாதையில்!

அறிவாலயம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது, சென்னையில் உள்ள கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயம் தான். ஒரு கட்சி அலுவலகம் எப்படி அமைய வேண்டும் என இந்திய அரசியல் கட்சிகளுக்கு இலக்கணமாக முத்தமிழறிஞர் தன் உணர்வைக் கலந்து உருவாக்கிய கொள்கை மாளிகைதான் அண்ணா அறிவாலயம்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முதன்முதலில் தலைமை நிலையமாக அமைந்தது, சென்னை ராயபுரத்தில் உள்ள அறிவகம். அதன்பின், தேனாம்பேட்டை அன்பகம். பிறகு, அரசினர் தோட்டத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, கழக அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அ.தி.மு.க அரசு நம்முடைய கழக அலுவலகத்தை சூறையாடுவதுபோல பொருட்களை எல்லாம் வெளியே தூக்கிப் போட்டது.

நெருக்கடி நெருப்பாறுகளைக் கடந்து வந்த இயக்கமல்லவா இது! கழகத்திற்கென நிலையான போதுமான இடவசதி கொண்ட தலைமை நிலையம் அமைக்க வேண்டுமென நம் ஆருயிர்த்தலைவர் கலைஞர் சூளுரைத்து, கழகத்திற்காக 1972-ல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை சார்பில் அண்ணா சாலையில் வாங்கப்பட்டிருந்த 86 மனை (கிரவுண்டு) நிலத்தில் அண்ணா அறிவாலயத்தை அழகும் கம்பீரமுமாக அமைத்தார்.

13 ஆண்டுகாலம் தி.மு.கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், கழகத் தொண்டர்கள் கொள்கையில் புடம் போட்ட தங்கங்களாக இருந்தனர். அண்ணா அறிவாலயம் அமைப்பதற்காக அன்றைய காலத்தில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்ற நிலையில், தலைவரின் சொற்களைக் கட்டளையாக ஏற்று, நிதியைக் குவித்தனர். மாவட்டக் கழகங்கள், ஒன்றிய நகர கழகங்கள், கிளைக் கழகங்கள், கழகத்தின் துணை அமைப்புகள், சார்பு அமைப்புகள், கழக நிர்வாகிகளின் தனிப்பட்ட பங்களிப்பு என ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைக்கப்பட்டு, ஒவ்வொரு செங்கல்லும் கழக உடன்பிறப்புகளின் பெயர் சொல்லும் உறுதிமிக்க கல்லாக அமைந்து, எழில்மிகுந்த முறையில் உருவானதுதான் நம் உயிர்நிகர்த் தலைவர் எழுப்பிய அண்ணா அறிவாலயம்.

உடன்பிறப்புகளின் உணர்வில் எழுந்த அந்த எழில்மிகு கட்டடத்திற்கான பங்களிப்பாக மாநில இளைஞரணி சார்பில் அதன் செயலாளராக இருந்த உங்களில் ஒருவனான நான் திரட்டித் தந்த நிதி, 3 லட்ச ரூபாய். 1987-ஆம் ஆண்டு கழகத்தின் முப்பெரும் விழாவினையொட்டி, செப்டம்பர் 16-ம் நாள் அண்ணா அறிவாலயம் திறப்பு விழா நிகழ்வு, மாபெரும் ஊர்வலத்துடன் நடைபெற்றது. கழக மாவட்ட அமைப்புகளும் பல்வேறு துணை அமைப்புகளும் பங்கேற்ற அந்த ஊர்வலத்தில் இளைஞரணியினர் வெள்ளைச் சீருடை அணிந்து, ராணுவ மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். பட்டாளம் நிகர்த்த அந்த அணிவகுப்பை, நான் தலைமையேற்று நடத்தினேன். கம்பீரமாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் அமைந்த அந்த அணிவகுப்பிற்குப் பிறகு, கழகத்தின் ஊர்வலங்கள், ‘பேரணி’ எனப்பெயர் பெற்றன. பெயருக்கேற்றாற்போல ஒவ்வொரு ஊர்வலமும் அதன்பின் பேரணியாகத் திகழ்ந்தன.

அண்ணா அறிவாலயத் திறப்பு விழாவில் நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், “அண்ணன் நமக்கு பலமான அடித்தளம் அமைத்த காரணத்தால்தான், எதிர்ப்புக் கணைகளை முறியடித்து, கழகம் வானளாவ உயர்ந்து நிற்கிறது. கழக உடன்பிறப்புகளின் உழைப்பும் தியாகமும்தான் இங்கு அண்ணா அறிவாலயமாக அழகுற மிளிர்கிறது” என்றபோது, ஒவ்வொரு உடன்பிறப்பின் உள்ளத்திலும் உணர்ச்சியலைகள் பரவின. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் நெஞ்சில் பதிந்தன. அதன்பின், 1988-ல் தேசிய முன்னணி தொடக்க விழாப் பேரணி சென்னை குலுங்கும் வகையில் வெற்றிகரமாக நடைப்பெற்றபோது, ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தைப் பார்வையிட்டு, முத்தமிழறிஞர் கலைஞரின் ஆற்றல் கண்டு அதிசயித்தனர்.

தலைமைக் கழகத்தின் நிர்வாகப் பணிகளுக்காக உருவான அறிவாலயத்தில், பல்லாயிரக்கணக்கான புத்தகங்களையும் ஏடுகளையும் கொண்ட பேராசிரியர் ஆய்வு நூலகம், வெற்றிச் செல்வி அன்பழகன் கண் மருத்துவமனை, நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலைஞர் அரங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டன. பின்னர், திராவிட இயக்க வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் ‘கலைஞர் கருவூலம்’ அமைக்கப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் அதனைத் திறந்து வைத்தார்.

அறிவாலயம் என்பது வெறும் கட்டடமல்ல. இயக்கத்தின் கொள்கையும் உடன் பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட லட்சிய மாளிகை! அப்படிப்பட்ட ஒரு திராவிட மாளிகையாக டெல்லிப்பட்டணத்தில் அண்ணா கலைஞர் அறிவாலயம் எழுந்து நிற்கிறது.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் சிந்தனையில் உருவான கட்டடங்கள் போலவே, 3 தளங்களைக் கொண்ட டெல்லி அறிவாலயமும் திராவிடக் கட்டட அமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ளது. உயரமான நான்கு தூண்களைக் கொண்ட முகப்பு, நுழைவாயிலில் அண்ணா, கலைஞர் இருவரது மார்பளவு சிலை, கழக நிர்வாகிகள் ஆலோசிப்பதற்கான இடம், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கான அறைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகம், கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் தங்குவதற்கான அறை என முத்தமிழறிஞரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அண்ணா கலைஞர் அறிவாலயம் அழகுற அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கழகக் கிளை அமைந்துள்ள இடங்களில் சொந்தமாக கட்டடம் கட்டி, அதன் ஒரு சாவியைத் தன்னிடம் தர வேண்டும் என்பது பேரறிஞர் அண்ணாவின் விருப்பம். பொதுக்கூட்டங்களுக்கு வரும்போது ஹோட்டலில் தங்காமல், கழக அலுவலகத்தில் தங்கி, தனது தம்பிகளுடன் உரையாட வேண்டும் என்பது அவர் எண்ணம். பேரறிஞர் பெருந்தகை அண்ணா மறைந்தாலும் அவர் எண்ணம் மறைந்து விடாத படி சென்னையில் அவர் பெயரில் அறிவாலயம் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அதன்பிறகு, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் சொந்தக் கட்டடங்கள் அழகுடனும் வசதியுடனும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இப்போது, இந்திய மத்தியத் தலைநகரில் அண்ணா கலைஞர் அறிவாலயத்தை உருவாக்கியிருக்கிறோம்.

பாராளுமன்ற மாநிலங்களவையில், ‘ஐ பிலாங் டூ த திராவிடியன் ஸ்டாக்’ (‘I belong to the Dravidian Stock’) என்று முழங்கி, சுதந்திர இந்தியாவின் அரசியல் தலைவர்களை முதன்முதலில் தெற்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர் பேரறிஞர் அண்ணா. “இந்தியாவின் தலைநகரம் டெல்லியா, சென்னையா” என்று வடபுலத்துத் தலைவர்கள் கேட்கும் வகையில், இந்திய அரசியலில் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் உருவாக்கிடும் ஆற்றல் மிக்க தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அந்த அண்ணாவும் கலைஞரும் இன்று நம்மிடையே இல்லை. பேராசிரியர் பெருந்தகை இல்லை. தலைவர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன் இல்லை. எனினும், அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், டெல்லிப் பட்டணத்தில் அறிவாலயம் அமைந்திருக் கிறது.

ஏப்ரல் 2-ம்நாள் நடைபெறும் திறப்பு விழாவில் பங்கேற்றிட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பாராளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தலைவர் கலைஞர் மீது அளவற்ற மரியாதை கொண்டவருமான சோனியா காந்தி அம்மையார், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள், சமூகநீதியை நிலைநாட்டப் பாடுபடும் கட்சிகளின் தலைவர்கள், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதிகொண்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார் கள்.

இந்திய மத்திய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கொள்கைகளை செயல் வடிவமாக்கும் திராவிட மாடலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதன் அழுத்தமான அடையாளம்தான் டெல்லியில் திறக்கப்படும் அண்ணா கலைஞர் அறிவாலயம்.

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப் பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது.

உடன்பிறப்புகளாகிய உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உவகை அடைகிறேன்; பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.