கார்ப்பரேட்டுகளின் உதவியுடன் பொருளாதாரத்தை பாஜ அரசு கொள்ளையடிக்கிறது :மாநில மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேச்சு

மதுரை: கார்ப்பரேட்டுகளின் உதவியுடன் பொருளாதாரத்தை பாஜ அரசு கொள்ளையடிக்கிறது என்று மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று காலை  துவங்கியது.  மாநாட்டு கொடியை மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் ஏற்றி வைத்தார். காலை  10 மணியளவில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது:பாஜ மீண்டும் ஆட்சியை பிடித்தது முதல் நாட்டில் இந்துத்துவா சித்தாந்தம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கார்ப்பரேட்டுகளின் உதவியுடன், நாட்டின் பொருளாதாரத்தை பாஜ அரசு கொள்ளையடித்து வருகிறது. சர்வாதிகாரத்தை கையாண்டு இந்திய அரசியல் அமைப்பின் பல்வேறு நிலைகளிலும் தாக்குதலை நடத்தி வருகிறது.இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட இந்தியாவில் உள்ள தன்னாட்சி அமைப்புகளான நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை தகர்த்து வருகிறது. பாராளுமன்றத்திலும் விவாதம் நடத்த முடியாத நிலை உள்ளது. பாஜவின் அதீத பெரும்பான்மையே இதற்கு காரணமாக உள்ளது. நீதிமன்றம் தற்போது வரை சட்டப்பிரிவு 370 குறித்தான வழக்கை விசாரணை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது. அதே போன்று அமலாக்க துறை, சிபிஐ உள்ளிட்ட நிறுவனங்களும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.ஜனநாயகத்தின் 4 தூண்களும் தகர்த் தெறியப்பட்டுள்ளன. மாநில சுயாட்சியும் பறிபோகும் நிலையில் உள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி, ஒன்றியங்களால் ஆனதே இந்தியா என்பதை பாஜ மறுக்கிறது. கூட்டாட்சி தத்துவமும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த நான்காண்டுகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம், விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை எதிர்த்து போராட்டம் என பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாஜவுக்கு வாக்களித்து வருகின்றனர். அதை உடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.