சந்தா கட்டல… புதைக்க இடம் தராத கிறிஸ்தவ சபைகள் – குழந்தை சடலத்துடன் போராடிய தாய்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அதே பள்ளியின் வேன் மோதி 2 ஆம் வகுப்பு படித்து வந்த தீக்சித் என்ற மாணவன் உயிரிழந்தான். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக விபத்து ஏற்படுத்திய பள்ளி வேன் டிரைவர் பூங்காவனம் (60), பெண் ஊழியர் ஞானசக்தி (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அதுமட்டுமின்றி பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளியின் முதல்வர் தனலட்சுமி ஆகிய 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி முதல்வரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் உடலை புதைக்க கூட கிறிஸ்தவ சபை இடம் தரவில்லை என சிறுவனின் தாயார் கண்ணீரும் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, நான் கிறிஸ்டியன். எனது கணவர் இந்து. என் பையன் இரண்டு மதத்தையும் விரும்புவான். ஆனால் இயேசுவை தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவன் விருப்பப்படி, உடலை கிறிஸ்தவ முறைப்படி புதைக்கலாமுனு அருகிலுள்ள ஆர்சி சபையிடம் கேட்ட போது, நீங்கள் சந்தா கட்டவில்லை அதனால் புதைக்க இடம் தர முடியாது என கூறிவிட்டார்கள்.

பின்னர், சிஎஸ்ஐ சபையை அணுகினோம். அவர்கள், நீங்கள் சிஎஸ்ஐ-யை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்திட மதுரையில் இருந்து சான்றிதழ் வாங்கிவாருங்கள். அப்படிவந்தால், இடம் தருகிறோம் என்றனர்.

குழந்தை சடலடத்தை வைத்துக்கொண்டு நான் மதுரைக்கு சான்றிதழ் வாங்க செல்லவேண்டுமா என கண்ணீருடன் கூறிய அவர், நாங்கள் ஊர் ஊராக பணிக்காக டிரான்ஸ்பர் ஆனாம். ஆனால், இப்படி ஒரு கட்டத்தில் கூட கிறிஸ்தவ சபைகள் உதவ மறுத்தது வேதனையளிக்கிறது. அப்படியொரு கிறிஸ்துவ மதமே வேண்டாம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

பின்னர், உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சிறுவனின் உடலை வளசரவாகத்தில் உள்ள கல்லறையில் புதைக்க இடம் ஒதுக்கப்பட்டது. இன்று காலை சிறுவனின் உடல் வளசரவாக்கத்தின் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏரளாமான பொதுமக்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.