துபாய் தொழிலதிபர்களை சபரீசன் ஏன் சந்திக்க வேண்டும்? ஆதாரங்களை வெளியிட்டு அண்ணாமலை கேள்வி| Dinamalar

சென்னை : ”முதல்வர் ஸ்டாலின், தற்போது துபாயில் சந்தித்த தொழிலதிபர்களை, கடந்த பிப்ரவரியில், அவரின் மருமகன் சபரீசன் எதற்காக சந்திக்க வேண்டும்?” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, முதல்வரின் குடும்பத்தினர், பிப்., 2ம் தேதி துபாய்க்கு விமான பயணம் செய்ததற்கான ஆதாரங்களை காட்டினார்.பின், அண்ணாமலை அளித்த பேட்டி:இந்த ஆண்டு பிப்., 2ல், ‘பால்கன் ஏவியேஷன்’ என்ற தனியார் நிறுவன விமானத்தில், சென்னையில் இருந்து தி.மு.க.,வை சேர்ந்த உதயநிதி, சபரீசன், கார்த்திகேயன், தி.மு.க.,வின் குடும்ப ஆடிட்டராக உள்ள சண்முகராஜ் உட்பட, ஒன்பது பேர் துபாய் சென்றனர்.அங்கு, முதல்வரின் மருமகன் சபரீசன் நடத்திய கூட்டத்தில், ஸ்டாலின் சந்தித்த தொழிலதிபர் யூசூப் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர், துபாய் சென்று திரும்பியதும், தமிழகத்திற்கு, 6,100 கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார். அதில், 4,600 கோடி ரூபாயை, துபாயில் இருக்கிற இரு தொழில் அதிபர்களான, கேரளாவை சேர்ந்த யூசூப் அலி மற்றும் ஆசாத் மூப்பன் முதலீடு செய்கின்றனர். அதில், 70 சதவீதம் யூசூப் அலிதான் முதலீடு செய்கிறார்.பிப்., 2ம் தேதியே துபாய் சென்று, சபரீசன் கூட்டம் போட்ட ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி, ‘முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; 100 கோடி ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும்’ என்று, எனக்கு வக்கீல், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். ‘அண்ணாமலை, அ.தி.மு.க., அமைச்சர்களை மிரட்டி பணம் வாங்கி இருக்கிறார்’ என்றும் பாரதி தெரிவித்துள்ளார்.நான் இன்னும் ஆறு மணி நேரம் கமலாலயத்தில் அமர்ந்திருப்பேன். அதற்கு ஆதாரம் இருந்தால், அவர்களுக்கு தெம்பு, திராணி இருந்தால், என்னை கைது செய்ய வேண்டும். இல்லையெனில், பா.ஜ., மீது தி.மு.க.,வினர் பரப்பும் பொய்களை, மக்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.சென்னையில் நடந்த கூட்டத்தில், சென்னை எண்ணுார் மின் திட்டத்தை, பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்குதான் வழங்க வேண்டும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதை ஏற்று, மின் வாரியம், பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குகிறது.

இதற்கு, முதல்வர் பதில் தெரிவிக்க வேண்டும்.தமிழகத்தில் மட்டும் தான், 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், ‘ஷாப்பிங் மால்’ கட்ட போவதாக தெரிவிக்கின்றனர். மற்ற மாநிலங்களில் எல்லாம் மோட்டார் வாகன தயாரிப்பு என, பல தொழிற்சாலைகள் அமைக்கப் போவதாக கூறுகின்றனர்.’மால்’ கட்டுவதை பெருமையாக நினைக்கும் முதல்வரை, தமிழகத்தில் தான் பார்க்கிறேன். ஆதாரங்களை வைத்து தான் அனைத்து கேள்விகளையும் கேட்கிறோம். அதற்கு பதில் தர வேண்டுமே தவிர, தரக்குறைவாக பேசுவதை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.பா.ஜ., பயப்படுகிற கட்சி அல்ல. முதல்வராக எனக்கு தகுதி கிடையாது. ஆனால், முதல்வரை உருவாக்க வந்திருக்கிறேன். ஒன்பது ஆண்டுகள், காவல் துறையில் பணியாற்றி வந்திருக்கிறேன். சொந்த கட்சியின் சின்னத்தில் நிற்க முடியாதவர்கள் எல்லாம், என்னை சுய விளம்பரத்திற்கு பேசுவதாக கூறுகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.