ரஷ்யா போரை நிறுத்தும் வரை, அமெரிக்க அழுத்தம் தொடரும்! சொல்கிறார் துணை தூதர் ஜூடித் ரேவின்| Dinamalar

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. இதில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? இது தொடர்பாக, சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் துாதர் ஜூடித் ரேவின் நமது நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி:

கடந்த இருபது ஆண்டுகளில், செசன்யா, ஜார்ஜியா, கிரிமியா போன்ற ரஷ்ய எல்லையோரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் வேறுசில பகுதிகளிலும், ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யா மீது நீண்டகால பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இத்தகைய தடைகளோ, புதிய தடைகள் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையோ, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை நிறுத்தவில்லை. இத்தகைய தடைகள் போதுமானவையாக இல்லையா? புதிய தடைகள் எந்த வகையில் வித்தியாசமானவை? ரஷ்யாவைப் பொறுத்தவரை, அமெரிக்கா ஏன், வெறும் தடைகள் என்ற அளவோடு நின்றுவிடுகிறது?

பல வகைகளில் இந்தத் தடைகள் வித்தியாசமானவை. இவை முன்னெப்போதும் இல்லாதவை. ரஷ்யா மீது செய்தது போன்று வேறு எந்த நாட்டின் மீதும், எந்தச் சூழ்நிலையிலும், இதுபோன்ற கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய விரைவான, ஒருங்கிணைந்த தடைகள் விதிக்கப்பட்டதில்லை. உக்ரைன் படையெடுப்புக்கு முன்பு இருந்ததை விட, தற்போது ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வீழ்ச்சியைத் தவிர்ப்பதற்காக பிப்ரவரி 25 முதல், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மாஸ்கோ பங்குச் சந்தை மூடப்பட்டது.

ரஷ்ய மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தை இரண்டு மடங்காக 20 சதவீத அளவுக்கு உயர்த்தியிருப்பதோடு அல்லாமல், முதலீட்டுக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. கிட்டத்தட்ட 400 தனியார் பன்னாட்டு நிறுவனங்கள், ரஷ்யாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறிவிட்டன. ஒருசில வாரங்களுக்குள்ளேயே, 30 ஆண்டுக்கால பொருளாதார வளர்ச்சி சரிந்துபோய்விட்டது.ரஷ்யாவின் முன்னணி நிதி நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளினால், அவற்றின் தொழில் ஆற்றல் மிகமோசமாக நசிந்துவிட்டன.

ரஷ்ய மத்திய வங்கி மீது விதிக்கப்பட்ட தடைகளால், என்னதான் அவர்கள் போதிய அன்னியச் செலாவணி சேமிப்புகளை உருவாக்கி வைத்திருந்தாலும், அவர்களுடைய நாணயமான ரூபிளின் மதிப்பை காப்பாற்ற முடியவில்லை. வெளிநாடுகளுக்குப் போய் அவர்களால் ரூபிளை வாங்க முடியவில்லை. காரணம், தடைகள். அதனால், அந்த நாணயத்தின் மதிப்பு கடுமையாக சரிந்துபோயுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மீது, அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. ஒரு நாட்டின் தலைவர் மீது தடைகள் விதிப்பது என்பது அரிதினும் அரிதான செயல்.

இதுபோன்று ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்ட, வட கொரியாவின் கிம் ஜோங் உன், பெலாரஸ் நாட்டின் அலெக்சாந்தர் லுகாசெங்கோ, சிரிய நாட்டின் பஷர் அல்-அசாத் ஆகிய ஒருசில சர்வாதிகாரிகளின் குழுவில் தற்போது புடினும் சேர்ந்துவிட்டார். ரஷ்யாவின் அதிகார வர்க்கம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீதும், அவர்களுடைய நிதி முதலீடுகள், சொத்துகள் மீதும், உக்ரைனை வீழ்த்துவதற்கு பொய்த் தகவல்களைப் பரப்பும் கிரெம்ளின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரு நிறுவனங்கள் மீதும், ரஷ்ய கூட்டமைப்பின் இராணுவ நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

ரஷ்யாவின் இராணுவ நிறுவனங்களின் நிதி ஆதாரத்தை முடக்கும் விதமாக, அங்குள்ள ஒரு டஜன் இராணுவ நிறுவனங்களை அமெரிக்க நிதி அமைப்பில் இருந்து நீக்கியதன் வாயிலாக, கடுமையான கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்கள் ஆழமான, நீண்ட கால பாதிப்புகளைச் சந்திக்கவிருக்கிறது. பாதுகாப்பு, விண்வெளி மற்றும் எரிசக்தித் துறை போன்ற முக்கிய துறைகளில் நவீனப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை ரஷ்யாவுக்கு வழங்கக்கூடாது என்று இதர நாடுகளோடு சேர்ந்து நாங்கள் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துஉள்ளோம். ரஷ்ய அதிபர் புடினுடைய நடவடிக்கையை மாற்ற வேண்டும் என்பதே இந்தத் தடைகளுடைய நோக்கமாகும். போரை புடின் நிறுத்தும் வரை இந்த அழுத்தம் தொடரும்.

‘நேட்டோ’ கூட்டமைப்பை விரிவாக்கும் முயற்சியால் தான், ரஷ்யா — உக்ரைன் போர் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா மீது ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. ரஷ்யாவின் எல்லைப் பகுதி அருகே நேட்டோ கூட்டமைப்பை விரிவாக்க வேண்டும் என்று அமெரிக்கா ஏன் நினைக்கிறது? குறிப்பாக, இதனை எதிர்த்து ரஷ்யா குரல் கொடுத்த பின்னும் ஏன் தொடர்கிறது?

latest tamil news

உங்கள் கேள்வியின் முகாந்திரமே சரியில்லை. இந்தப் பிரச்னையின் ஆரம்பத்தில் இருந்து, உக்ரைன் மற்றும் நேட்டோ கூட்டமைப்பினால், தான் பாதிப்புக்குள்ளாவதாக ரஷ்யா பொய்யாகக் குற்றம் சாட்டி வருகிறது. ரஷ்யாவோடு மோத வேண்டும் என்று அமெரிக்காவுக்கோ, நேட்டோ நாடுகளுக்கோ எந்தவிதமான ஆசையோ, நோக்கமோ இல்லை. நேட்டோ என்பது ராணுவக் கூட்டணி. அதன் உறுப்பு நாடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான் அதன் நோக்கம்.

ரஷ்யாவின் நில எல்லை என்பது 20 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டது. அதில், பதினாறில் ஒரு பங்கைவிடக் குறைவான பகுதிதான், அதாவது 1,215 கி.மீ., தான் நேட்டோ உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. பதினான்கு நாடுகளோடு ரஷ்யா தனது நில எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. அதில் ஐந்து நாடுகள் தான் நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்தவை. உண்மை இது தான்: கடந்த, 2008ல் நேட்டோ ஜார்ஜியா மீது போர் தொடுக்கவில்லை; 2022 இல் நேட்டோ உக்ரைன் மீது போர் தொடுக்கவில்லை. இந்த இரண்டு ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கும் ரஷ்யாவே காரணம்.

போர் நடந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், அமெரிக்கா தளவாடங்களை மட்டுமே வழங்கி வருகிறது. உக்ரைன் மீது விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி வைக்கும் கோரிக்கையை அமெரிக்கா ஆதரிக்க முன்வரவில்லை. ஏன் இப்படி?

விமானங்கள் பறக்கக்கூடாத பகுதியை அமெரிக்க இராணுவம் வலியுறுத்துமேயானால், அது, ரஷ்யாவோடு நேரடி மோதலை ஏற்படுத்துவதுடன், போரில் ஈடுபடுவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அது நிச்சயம் நடக்கக்கூடாது என்பதில், அதிபர் பைடன் தெளிவாக இருக்கிறார். உக்ரைன் மீது புடின் தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவரத் தான் நாங்கள் முயற்சி செய்கிறோமே தவிர, அதைவிடப் பெரிய போர் ஒன்றைத் துவங்குவதற்கு அல்ல.கூடவே, இதர நாடுகளோடு சேர்ந்து, அமெரிக்கா, அபரிமிதமான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

latest tamil news

இது உக்ரைனியர்களின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதுடன், அதன் வாயிலாக, ரஷ்யாவின் குண்டுவீச்சுகளில் இருந்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரைன் படைகள் நேரடியாகச் சந்திப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்வோம். உக்ரைனியர்கள் மேற்கொள்ளும் போருக்கு நாங்கள் தொடர்ந்து ஆயுத உதவி, பொருளாதார உதவி, மனிதாபிமான உதவி ஆகிய அனைத்தையும் வழங்குவோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் துவங்கியதில் இருந்து, அமெரிக்கா, 14,911 கோடி ரூபாய் வரை ஏற்கனவே உதவியுள்ளது. மார்ச் 24ஆம் தேதிஅன்று, மேலும் 7,625 கோடி ரூபாய் அளவுக்கு புதிய உதவிகள் வழங்கப்படும் என்று அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைனை கருத்தில் கொள்ளும்போது, அமெரிக்கா ஒரு நம்பகமான கூட்டாளி இல்லை என்ற சித்திரம் உருவாக்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளைக் கொண்ட, ‘க்வாட்’ கூட்டமைப்பின் வலிமையைப் பற்றி, இந்திய ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்…

இவ்வாறு சித்திரிக்கப்படுவதை நான் மறுக்கிறேன். இந்தோ பசிபிக் பகுதியில் உள்ள நாடுகள் உள்பட, அனைத்துக் கூட்டணி நாடுகளுடனும் ஆழ்ந்த பிணைப்பைக் கொண்டுஉள்ளது அமெரிக்கா.’க்வாட்’ என்பது மதிப்பீடு களை அடிப்படையாகக் கொண்ட கூட்டணி மட்டுமல்ல; அது அதன் திறன்களையும் அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு ‘க்வாட்’ உறுப்பு நாடும், ஜனநாயக மதிப்பீடுகளில் காலுான்றியதாக, எந்தவிதமான வற்புறுத்தலும் இல்லாததாக உருவாக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். சட்டத்தின் ஆட்சி, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தில் சுதந்திரம், பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணுதல் மற்றும் எல்லை உரிமைகளைப் பாதுகாத்தல் என்பனவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம்.

‘க்வாட்’ கூட்டமைப்பு, இந்தப் பகுதியின் முக்கியமான சவால்களை எதிர்கொள்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. உதாரணமாக, கொரோனா தடுப்பூசிக்கான உதவி, பெருந்தொற்றுக்குப் பின்னர் தேவைப்படும் பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கையாளுதல், கடல்வழிப் பாதுகாப்பு, அத்தியாவசியமான மற்றும் வளரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு, உள்கட்டுமான வளர்ச்சி மற்றும் வெளிநாடுகள் பரப்பும் பொய்ச் செய்திகளை எதிர்கொள்வது உள்ளிட்ட பல அம்சங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்.

ரஷ்யாவும், சீனாவும் ராஜதந்திர ஒருங்கிணைப்புக்கு மேல், ‘தனிச் சிறப்பான’ உறவைப் பேணி வருவதாகத் தெரிகிறது. இதனால், அமெரிக்க – சீன உறவில் ஏதேனும் மாற்றம் வருமா? இதனால் இந்தியாவுக்கு என்ன பலன்?

சிறிது காலமாக ரஷ்யாவும், சீனாவும், மிகவும் நெருங்கி வருகின்றன. சர்வாதிகாரத்தை தன்னிச்சையாக விரிவுபடுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க விரும்புகின்றன. அதிபர் புடினும் அதிபர் ஜீ ஜிங்பிங்கும் உலகத்தைப் பற்றிய தங்கள் நோக்கத்தைத் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் உள்ள பெரிய ஜனநாயக நாடுகள், உலகத்தின் மொத்த பொருளாதாரத்தில் பாதியளவுக்கு உள்ளன; ரஷ்யா மற்றும் சீனாவின் மொத்த பொருளாதாரம் 20 சதவீதம் கூட இல்லை.

எனினும், நாம் அடைய நினைக்கும் இலக்கை அடைய விடாமல் தடுப்பதில், புடின் மற்றும் சீன அதிபர் முன்வைக்கும் சவால்களை, புறந்தள்ளி விட முடியாது. ரஷ்யாவும் சீனாவும், அண்டை நாடுகளுக்கு விடுக்கும் பயமுறுத்தல்களையும், சர்வதேச அமைப்பையே குலைக்கும் திட்டத்தையும் முறியடித்து பாதுகாக்க வேண்டும்.

சீனா, ரஷ்யா, மற்றும் ஒருசில மத்திய கிழக்கு நாடுகள் இணைந்து வலுவான கிழக்கு அணியை உருவாக்கியுள்ள நிலையில், இந்தியாவோடு அமெரிக்கா எத்தகைய வெளியுறவு கொள்கையைப் பின்பற்றும்?

இந்தியாவுடனான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அது ஆரோக்கியமாகவே இருக்கிறது. வாஷிங்டன் நகரத்தில் நடைபெற இருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும், அடுத்த ‘க்வாட்’ தலைவர்களின் உச்சி மாநாட்டில், இதர ‘க்வாட்’ தலைவர்களோடு, அதிபர் பைடனும், பிரதமர் மோடியும் சந்திக்க உள்ளனர்.அமெரிக்காவும் இந்தியாவும் எண்ணற்ற அரசு ரீதியிலான, பாதுகாப்பு தொடர்பான, பொருளாதாரப் பிரச்னைகளில் ஒருங்கிணைந்து வேலை செய்கின்றன.

அவற்றில், இந்தோ பசிபிக் பகுதியில் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், சுகாதாரத் துறை ஒத்துழைப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள், அமைதியை நிலைநாட்டுதல், சுற்றுச்சூழல், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண்மை, வானியல் மற்றும் பெருங்கடல்கள் ஆகியவையும் அடங்கும்.இந்தோ பசிபிக் பிராந்தியம் முழுதிலும், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி மேம்பட, அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.