அமலாக்கப் பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பின்னடைவு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

High Court dismisses special court order on Senthil Balaji case: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான குறியீடு செய்யப்படாத ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011 -15-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்துறையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததில் சட்டவிரோதமாக பணம் கை மாறியதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 3 வழக்குகளின் ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை வழங்க கோரி அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு; NHAI அறிவிப்பு

இதனை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், ஆவணங்களை வழங்க உத்தரவிட கோரியும் அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு சில ஆதார ஆவணங்கள் தேவைப்படுகிறது. அதை காவல்துறை தரப்பில் கேட்டபோது வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தார்.

மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான ஒரு வழக்கு ரத்து செய்யபட்டுள்ளதால் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம் வழங்க மறுப்பது அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 3 வழக்கு ஆவணங்களை வழங்க எந்த தடையும் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா, காவல்துறை தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங்களும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை வழங்கவோ, மறுக்கவோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்தபின், நகல் வழங்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.