இம்ரான் கானை வீழ்த்திய பாகிஸ்தான் ராணுவம்… துணை நின்றதா அமெரிக்கா? பரபர திருப்பங்கள்!

மீண்டும் ஒருமுறை அரசியல் குழப்பத்தை சந்திக்கிறது பாகிஸ்தான். பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் இணைந்து கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ‘அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்று துணை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். இல்லாவிட்டால் இம்ரான் ஆட்சி கவிழ்ந்திருக்கும். இம்ரான் உடனே சாமர்த்தியமாக, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு பரிந்துரை செய்தார். உடனே ஜனாதிபதி அதை ஏற்றார். மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதிர்க்கட்சியினர் இதை ஏற்கவில்லை. அவர்கள் ஒரு சபாநாயகரை வைத்து நாடாளுமன்றத்தை நடத்தி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றி பெறச் செய்தனர். உடனடியாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தம்பி ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராகத் தேர்வு செய்தனர். நாடாளுமன்ற விதிகளின் படி நடைபெறாத இந்த நடைமுறைகளை ஜனாதிபதி ஏற்பாரா என்பது தெரியவில்லை.

இம்ரான் கான்

‘‘ராஜினாமா செய்வது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திப்பது, தேர்தலை எதிர்கொள்வது என்று மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு நிர்வாகம் என்னிடம் சொன்னது’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொன்னார். நாட்டை நிர்வாகம் செய்வதே பிரதமர்தான். பிறகு அவர் ‘நிர்வாகம்’ என்று யாரைச் சொன்னார்?

ராணுவத் தளபதி ஜாவேத் பாஜ்வா கடந்த வாரம் இம்ரானை சந்தித்தார். அவரைத்தான் ‘நிர்வாகம்’ என்று இம்ரான் குறிப்பிடுகிறார் என்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்.

‘இந்தியாவில் ராணுவத் தளபதி யார் என்பதை பிரதமர் முடிவு செய்வார். ஆனால், பாகிஸ்தானில் யார் பிரதமர் என்பதையே ராணுவம்தான் முடிவு செய்யும்’ என்று கிண்டலாகச் சொல்வார்கள். பாகிஸ்தான் ராணுவத்துடன் மோதினால் எவ்வளவு செல்வாக்கான அரசியல்வாதியாக இருந்தாலும் நாற்காலி கவிழ்க்கப்படும். சுதந்திரம் வாங்கிய 75 ஆண்டுகளில் பாகிஸ்தானில் எந்தப் பிரதமரும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ததில்லை. இம்ரான் கானுக்கும் அதே கதி நேர்ந்திருக்கிறது. ராணுவத்துடன் கூட, இதில் அமெரிக்காவும் சேர்ந்து இம்ரானைக் கவிழ்த்திருக்கிறது.

கிரிக்கெட் உலகக் கோப்பையை பாகிஸ்தானுக்கு ஒரே ஒருமுறை பெற்றுத் தந்த கேப்டனாகக் கொண்டாடப்படுபவர் இம்ரான். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அரசியலில் குதித்தார். ‘புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் வென்று பாகிஸ்தான் பிரதமர் ஆனார் இம்ரான். தேர்தலில் தில்லுமுல்லுகள் நடைபெற்றதாகவும், ராணுவத்தின் மறைமுக ஆசியால் அவர் வெற்றி பெற்றதாகவும் சொல்லப்பட்டது. 342 உறுப்பினர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 156 இடங்களே இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சிக்குக் கிடைத்தன. மூன்று சிறிய கட்சிகள் அவரை ஆதரித்தன. 177 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார் அவர்.

ஆட்சியில் நான்காவது ஆண்டைக் கடக்கும் நேரத்தில், எதிர்க்கட்சிகள் இணைந்து இம்ரான் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. இந்த நேரத்தில் அவரது கட்சியிலிருந்தே 20க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். கூட்டணிக்கட்சியான எம்.க்யூ.எம் திடீரென எதிரணிக்குத் தாவிவிட்டது. இதனால் இம்ரான் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது.

இம்ரான் கான்

பூட்டோ குடும்பத்தின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரிப் நடத்திவந்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியுமே அங்கு மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இம்ரான் அரசியலுக்கு வந்து இந்த நிலையை மாற்றினார். பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ இப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளால் நாட்டை விட்டே வெளியேறிய நவாஸ் ஷெரீப்பின் கட்சியை இப்போது நவாஸின் தம்பி ஷெபாஸ் ஷெரீப்பும், நவாஸின் மகள் மரியம் நவாஸும் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளுடன் மற்ற எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரே அணியை உருவாக்கின. இந்த அணியே இம்ரானுக்கு வில்லனாக மாறியிருக்கிறது.

இம்ரான் அரசு கவிழக் காரணம் என்ன?

பாகிஸ்தானில் ராணுவத்தின் ஆதிக்கம் ஜெனரல் ஜியா உல் ஹக் காலத்தில் ஆரம்பித்தது. பிரதமராக இருந்த ஜுல்பிகர் அலி பூட்டோ, வெளிநாட்டு விருந்தினர்கள் முன்னிலையில் ராணுவத் தளபதி ஜியாவை அவமானப்படுத்தினார். தக்க தருணத்துக்ௐகாக காத்திருந்த ஜியா, 1977-ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியைப் பிடித்தார். பிரதமருக்கு மரண தண்டனை விதித்தார். 11 ஆண்டுகள் கழித்து ஒரு விமான விபத்தில் ஜியா உல் ஹக் இறக்கும்வரை அவர் ஆட்சியே தொடர்ந்தது. அது விபத்தா, வெளிநாட்டு சதியா என்ற மர்மம் இன்றுவரை விலகவில்லை.

ஜியா காலத்தில் ராணுவத் தளபதிக்கான அதிகாரங்கள் கூடின. ஜியாவின் மரணத்துக்குப் பிறகு தேர்தல் மூலம் பிரதமர்கள் பதவிக்கு வந்தாலும், அந்தத் தேர்தல் முடிவுகளை ராணுவமே தீர்மானித்தது. ராணுவத்தை அவர்கள் பகைத்துக்கொண்டால், ஆட்சியே கவிழ்ந்தது. நாடாளுமன்றமோ, நீதிமன்றமோ அதைச் செய்துவிடும்.

இதற்கு நவாஸ் ஷெரீப்பே உதாரணம். 1990-ல் அவர் ஆட்சிக்கு வந்தபோது ராணுவத் தளபதியாக இருந்தவர் ஆசிப் நவாஸ். பிரதமர் தனக்கு நெருக்கமாக இருந்த ஹமித் குல் என்பவரைத் துணைத் தளபதியாக நியமித்தார். ராணுவத் தளபதி ஆசிப்புக்கு இந்த நியமனம் பிடிக்கவில்லை. அவர் துணைத் தளபதியை கட்டாய ஓய்வில் அனுப்பினார். பிரதமரே எதிர்ப்பு தெரிவித்தும் இதைத் தடுக்க முடியவில்லை.

மூன்று ஆண்டுகள் கழித்து ஆசிப் நவாஸ் ஓய்வுபெற்றார். அந்த இடத்தில் ஜூனியராக இருந்த ஒருவரை நியமிக்க ஆசிப் முடிவு செய்தார். அதைப் பிரதமர் நவாஸ் ஷெரீப் எதிர்த்தார். ராணுவ அதிகாரிகள் அனைவரும் இணைந்து பிரதமரைப் பதவி விலகவைத்தனர்.

1997-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தார் நவாஸ். இம்முறை ராணுவத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க முயன்றார். அதற்காக, பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு தன் நண்பர் ஒருவரைத் தலைவராக நியமித்தார். இதை ராணுவத் தளபதி ஜஹாங்கீர் கராமத் கடுமையாக எதிர்த்தார். ‘‘அரசு தேவையற்ற செலவுகளைச் செய்கிறது. அரசின் முடிவுகளில் ராணுவத்தின் பங்கும் இருக்க வேண்டும்” என்று ராணுவத் தளபதி வெளிப்படையாக பிரதமரை விமர்சனம் செய்தார். ஷெரீப் உடனே ராணுவத் தளபதி ஜஹாங்கீரை பதவிநீக்கம் செய்தார். ஜூனியராக இருந்த பர்வேஸ் முஷாரப்பை மிகுந்த நம்பிக்கையுடன் ராணுவத் தளபதியாக நியமித்தார்.

பர்வேஸ் முஷாரப்

அந்த நம்பிக்கையான முஷாரப், பிரதமருக்கே தகவல் சொல்லாமல் கார்கில் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தை ஊடுருவச் செய்து போரை உருவாக்கினார். ‘எனக்கே தெரியாமல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடன் போர் செய்கிறதா’ என்று கோபத்துடன் முஷாரப்பை பதவிநீக்கம் செய்தார் நவாஸ் ஷெரீப். நவாஸைத் துரத்திவிட்டு ராணுவ ஆட்சியை முஷாரப் ஏற்படுத்தியது வரலாறு.

அதன்பின் பிரதமர்கள் யாரும் ராணுவத்துடன் மோதியதில்லை. இம்ரானும் ஆரம்பத்தில் ராணுவத்துடன் இணக்கமாகவே இருந்தார். ஐ.எஸ்.ஐ தலைவராக இருக்கும் ஃபைஸ் ஹமீத் என்பவர் இம்ரானுக்கு நெருக்கமானவர். இம்ரானின் தேர்தல் வெற்றிக்கு உதவியவர். அவரை அங்கிருந்து தூக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் ராணுவத் தளபதி ஜாவேத் பாஜ்வா. ஆனால், இம்ரான் அதை எதிர்த்தார்.

தளபதி பாஜ்வா பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிகிறது. அதன்பிறகு தனக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால், பாஜ்வாவுக்கு பதவி நீட்டிப்பு தராமல், ஃபைஸ் ஹமீத்தை ராணுவத் தளபதியாக நியமிக்க இம்ரான் ஆசைப்பட்டார். இதைத் தெரிந்துகொண்ட பாஜ்வா, எப்படியாவது ஃபைஸ் ஹமீத்தை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்குத் துரத்த முயன்றார். இதற்கு ஒத்துவராத இம்ரானின் ஆட்சியை அரசியல் சதி செய்து கவிழ்த்துவிட்டது ராணுவம்.

அதனால்தான் தன் கட்சி சார்பில் நடத்திய பேரணியில் ராணுவத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தார் இம்ரான். ‘பாகிஸ்தான் அரசியல் குழப்பத்தில் நாங்கள் எந்தப் பக்கமும் இல்லை. நடுநிலை வகிப்போம்’ என்று ராணுவம் கூறியிருந்தது. இதை இம்ரான் கிண்டல் செய்தார்.

இம்ரான் கான் – ட்ரம்ப்

பாகிஸ்தான் ராணுவம் ஒரு பக்கம் இம்ரானின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றால், அமெரிக்காவும் இன்னொரு காரணம். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இம்ரான் கான் வெளிப்படையாக டிரம்பை ஆதரித்தார். இது ஜோ பைடனுக்குப் பிடிக்கவில்லை. தேர்தலில் ஜெயித்து அமெரிக்க அதிபராகும் எவரும் முதலில் போன் செய்து பேசும் உலகத் தலைவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமரும் இருப்பார். அந்த அளவுக்கு அமெரிக்காவும் பாகிஸ்தானும் நெருக்கம். ஆனால், இம்ரானுடன் பேசுவதை ஜோ பைடன் தவிர்த்தார். பாகிஸ்தான் அரசு இதை வெளிப்படையாகக் குறை கூறியது. ஆனாலும் இதுவரை இம்ரானுடன் அவர் பேசவில்லை. இந்தியப் பிரதமர் மோடியுடன் அடிக்கடி பேசி இம்ரானுக்கு எரிச்சல் கிளப்பினார். பதிலுக்கு சீனாவுடன் நெருக்கம் காட்டி பைடனுக்கு எரிச்சலூட்டினார் இம்ரான். பாகிஸ்தான் பிரதமர் யாரும் ரஷ்யாவுக்குப் போவதில்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் ஆரம்பித்த நேரத்தில் ரஷ்யாவுக்குச் சென்றார் இம்ரான்.

இப்படி அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து இம்ரான் செயல்படுவதை ஜோ பைடன் ரசிக்கவில்லை. பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதராக இருக்கும் டொனால்டு ப்ளோம், அந்த நாட்டின் அரசியல் விவகாரங்களைக் கரைத்துக் குடித்தவர். எதிர்க்கட்சித் தலைவர்களான பிலாவல் பூட்டோ, நவாஸ் ஷெரீப் ஆகியோருக்கு நெருங்கிய நண்பர். தன் ஆட்சியைக் கவிழ்ப்பதில் அவர் பங்கும் இருப்பதாக இம்ரான் நம்புகிறார்.

பிலாவல் பூட்டோ, மக்பூல் சித்திக்கி, ஷெபாஸ் ஷெரீப், மௌலானா ஃபசல்-உர்-ரஹ்மான்

இந்தியாவின் ஜனநாயக நடைமுறைகளைப் பார்த்து பாகிஸ்தான் பிரதமர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். இம்ரானும் அதைச் செய்திருக்கிறார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கண்டித்து ஐ.நா சபையில் தீர்மானம் வந்தபோது இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் நடுநிலை வகித்தது. ஆனால், ரஷ்யாவை கண்டிக்கும் தங்கள் அணியில் சேருமாறு பாகிஸ்தானை ஐரோப்பிய யூனியன் நாடுகள் நிர்பந்தம் செய்தன. ‘‘நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட நாங்கள் என்ன உங்கள் கொத்தடிமைகளா? இதேபோன்ற கடிதத்தை இந்தியாவுக்கு எழுதுவீர்களா?” என்று கொந்தளித்தார் இம்ரான் கான்.

இந்த வித்தியாசம்தான் இந்தியாவை இந்தியாவாகவும், பாகிஸ்தானை பாகிஸ்தானாகவும் வைத்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.