இந்தியாவின் ரிக்கி கேஜ் இரண்டாவது முறையாக கிராமி விருதை வென்றார்! பிரதமர் மோடி பாராட்டு

லாஸ் வேகாஸ்,
இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. 

இந்த விழாவில், ரிக்கி கேஜ்  இரண்டாவது முறையாக கிராமி விருதை வென்றார். “டிவைன் டைட்ஸ்..” என்ற ஆல்பம் பாடலுக்காக, ஸ்டீவர்ட் கோப்லேண்ட் உடன் சேர்ந்து அவர் விருது பெற்றுள்ளார்.
விருது மேடையில், ரிக்கி கேஜ் பார்வையாளர்களை நோக்கி  “நமஸ்தே” என்று வணக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில், கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!’ என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
பெங்களூரு நகரை பூர்வீகமாக கொண்ட ரிக்கி, 2015ம் ஆண்டு முதன்முறையாக கிராமி விருதை வென்றார். சிறந்த புதிய வயது ஆல்பம் பிரிவில், அவர் இயற்றிய “விண்ட்ஸ் ஆப் சம்சாரா..” என்ற ஆல்பம் பாடலுக்கு விருது கிடைத்தது.
64வது கிராமி விருது விழாவில், ஏராளமான இசை கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்திய சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், இந்த  நிகழ்ச்சியில் தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் கலந்து கொண்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.