சொத்து வரி உயர்வு – சத்தமின்றி மக்களிடம் அதிருப்தியை சம்பாதிக்கிறதா திமுக அரசு?

சொத்துவரி உயர்வு:

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது தனது அறிக்கையில், 2022-2023-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளில் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-2022-ம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது .

தமிழக அரசு – சொத்துவரி

இந்த காரணங்களால் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், குடியிருப்பு, வணிக கட்டடங்கள் மற்றும் கல்வி பயன்பாடு கட்டடங்கள் பரப்பளவுக்கு ஏற்ப சொத்துவரியை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. 600 சதுர அடிக்கும் குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவிகிதமும், 601 முதல் 1200 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 1201 முதல் 1800 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு 75 சதவிகிதமும், 1800 சதுர அடிக்கும் அதிகமுள்ள கட்டடங்களுக்கு 100 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விளக்கம்:

வரி உயர்வு தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என். நேரு, “பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சொத்துவரி உயர்வு அவசியம். ஏழை மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதிக்குழு கூறியதன் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. அப்படி சொத்துவரியை உயர்த்தவில்லை என்றால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. இந்த வரி உயர்வு நாட்டின் மற்ற நகரங்களை விட மிகவும் குறைவு” என்றார்.

கே.என். நேரு

மேலும், “அதிமுக ஆட்சியில் 200 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டது. தேர்தல் வந்த காரணத்தினால் தங்களின் முடிவை அதிமுக நிறுத்திவைத்துவிட்டது. தற்போது ஏழைகளுக்குக் குறைவாகவும், 1800 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு அதிகமாகவும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைந்த சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

சொத்து வரி உயர்ந்ததற்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, “ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்குச் சிறப்புப் பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இது வெறும் ட்ரெய்லர்தான். இனி தான் மக்களுக்குப் பல பம்பர் பரிசு காத்திருக்கின்றது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், பாபு முருகவேலிடம் பேசினோம். “ `படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயில்’ என்ற கதை தான் திமுகவுடையது. எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில், மக்களுக்கு எதிரானது என்று எதையெல்லாம் சொல்லி போராட்டம் நடத்தினார்களோ. இப்போது ஆளும்கட்சியாக இருக்கும் நேரத்தில் அவை அனைத்தும் நியாயமாக மாறிவிடும். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், சொத்து வரி ஏற்றப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதற்கே, போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று கூப்பாடு போட்டது திமுக. இப்போது, திருட்டுத் தனமாக, மக்களைச் சந்திக்கத் திராணி இல்லாது, இரவோடு இரவாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது திமுக. இதற்கு முன்பாக எப்போது சொத்து வரி ஏற்றப்பட்டது என்று பார்த்தல் அதுவும் திமுக ஆட்சியில் தான்.

பாபு முருகவேல்

வரி உயர்வுக்கு மதிய அரசு தான் காரணம் என்று சொல்கிறது என்றால், தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தால் போராடுவோம் என்று கூறிய திமுக, இதுவும் தமிழக மக்களுக்குப் பாதிப்பு தரக்கூடிய செயல்தானே? உண்மையில் பலம் கொண்ட உள்ள ஒரு அரசாக இருந்தால் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தலாமே? அதை ஏன் செய்யவில்லை? அப்படியென்றால் உங்களுக்குச் சாதகமான விஷயம் என்றால் மத்திய அரசு கட்டாயப்படுத்தியது என்றும், பாதகமான விசயத்துக்கு எதிர்த்துப் போராடுவதைத் தான் திமுகவினர் செய்துவருகிறார்கள். அவர்களின் நிலைப்பாடு, சிறிதும் பொதுநலம் இல்லாத தன்னலம் சார்ந்த ஒரு விசயமாக மட்டுமே இருக்கிறது” என்று பேசினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “கடந்த அதிமுக ஆட்சியில் சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பு வரும்போது, சொத்து வரியா அல்லது சொத்தை பறிப்பதற்கு வரியா என்று கூறியது திமுக. இன்று சொத்து வரியை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில், சிறு குறு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துள்ளது திமுக. கொரோனா பேரிடர் காரணமாக, வியாபாரம் மோசமாக இருக்கிறது, பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது என்று சமீபத்தில் தான் நிதியமைச்சர் தெரிவித்தார். இப்போது சொத்துவரி உயர்த்தியுள்ளது மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களின் வாடகை உயரும். இது மிகவும் தவறான செயல் ” என்றார்.

நாராயணன் திருப்பதி

மேலும், “இந்தியாவின், மற்றப் பகுதிகளை விட ஏழை எளிய மக்களுக்குத் தமிழகத்தில் சொத்து வரி குறைவு என்று அமைச்சர் பேசியுள்ளார். உண்மையில், மும்பையில் 500 சதுர அடிக்கும் குறைவான கட்டடங்களில் வசிக்கும் மக்களுக்குச் சொத்து வரி இல்லை. அமைச்சர் தெரியாமல் சொல்கிறார் அல்லது வேண்டுமென்றே சொல்கிறார் என்று நினைக்கிறேன். அடுத்தது, மத்திய அரசு தான் காரணம் என்று சொல்வது தவறான ஒன்று. மத்திய அரசு எப்படி மாநில அரசை நிர்ப்பந்திக்க முடியும். அடிப்படையான சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்று தான் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த விசயத்தில் அமைச்சர் தெரியாமல் பேசுகிறார். அல்லது தெரிந்தே மத்திய அரசைத் தவறு சொல்கிறார்” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.