திருவாரூர்: இரவில் டூ வீலரில் வந்த தம்பதி; கொடூரமாக தாக்கி நகைகளை பறித்த முகமூடி கொள்ளையர்கள்

திருவாரூர் அருகே உள்ள அலிவலம் பகுதியில் டூவிலரில் சென்று கொண்டிருந்த தம்பதியரை தாக்கி, முகமூடி கொள்ளையர்கள் நகைகளை பறித்து சென்ற சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிக்க, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன். இவர் கட்டுமான பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மேகலா. இவர் திருவாருர் துர்காலயா சாலையில் உள்ள தையல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு தையல் நிறுவனத்தில் இருந்து கிளம்பிய மேகலா தனது கணவர் வீரராகவனுடன் டுவீலரில் கருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

திருவாரூர் அருகே உள்ள அலிவலம் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த 6 பேர் கும்பல் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, இவர்களை வழிமறித்திருக்கிறது. ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்பதை உணர்ந்த வீரராகவனும் மேகலாவும் பதற்றமடைந்திருக்கிறார்கள். ஆனால் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்த நிலையில் வீரராகவனை இரும்பு கம்பியால் தாக்கிய முகமூடி கும்பல், மேகலா கழுத்தில் அணிந்திருந்த 11 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த வீரராகவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். மேகலாவின் அழுகுரல் கேட்டு, அங்கு ஓடி வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

முகமூடி கொள்ளையர்கள்

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர், வீரராகவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்த கொள்ளை சம்பவம் குறித்த தகவல் திருவாரூர் மக்கள் பெரும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வரும் திருவாரூர் தாலுகா காவல்துறையினர், இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடி தலைமறையாகியுள்ள முகமூடி கொள்ளையர்களை தேடிவருகின்றனர். அலிவலம் பகுதியில் உள்ள பிரதான சாலையில் நீண்ட தூரம் வரையில் மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் எப்போதுமே இருள் சூழ்ந்து கிடக்கும். இதை முன்கூட்டியே திட்டமிட்டுதான், முகமூடி கொள்ளை கும்பல் இந்த நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது எனவும், இதே நிலை தொடர்ந்தால், மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடரக்கூடிய ஆபத்துகள் இருப்பதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். எனவே முக்கிய சாலைகளில் உடனடியாக மின்விளக்குகள் அமைப்பதோடு, இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.