மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்.. ஓ.பி.எஸ் வலியுறுத்தல்.!!

மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 இலட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக, 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, அதாவது Central University Entrance Test (CUET) நடத்தப்படும் ‘ என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு தி.மு.க. அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டதாகவும், நுழைவுத் தேர்வுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்தத் தேர்வு தமிழ் மொழி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும் என்பதோடு மட்டுமல்லாமல் பன்னிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணிற்கு ஒரு மதிப்பு இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இந்த நுழைவுத் தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இதனை முளையிலேயே’ – கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு உண்டு. நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற 

மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். . அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத் தேர்வு விஷயத்திலாவது இதுதான் சரியான தருணம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, காலந்தாழ்த்தாமல் நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உள்ளது.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.