சர்வதேச இசையில் சாதனை – 'கிராமி' வென்ற இந்தியர்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ் : சர்வதேச அளவிலான சிறந்த இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் 'கிராமி' விருதை, இந்தியாவைச் சேர்ந்த இருவர் வென்று உள்ளனர்.

சிறந்த, 'ஹாலிவுட்' திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதைப் போல, சர்வதேச அளவிலான சிறந்த இசை கலைஞர்களுக்கு, 'கிராமி' எனப்படும் கிராமபோன் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதன் 64வது ஆண்டு விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்று நடந்தது.

இதில், இந்தியாவைச் சேர்ந்த பாடகி பல்குனி ஷா மற்றும் ரிக்கி கெஜ் இருவரும் விருதுகளை வென்றனர். மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பாடகி பல்குனி ஷா 2000ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். படிப்பை முடித்த பின் தனியாக இசைக்குழு துவங்கி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். அமெரிக்காவின் பிரபலமான இசைக் கலைஞர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இசை ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்ட 'எ கலர்புல் வேர்ல்ட்' என்ற இசை ஆல்பம், குழந்தைகளுக்கான ஆல்பம் என்ற பிரிவில் கிராமி விருதை வென்றது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் பிறந்து வளர்ந்த பாடகர் ரிக்கி கெஜ், தற்போது கர்நாடகாவின் பெங்களூரில் வசித்து வருகிறார். 'விண்ட்ஸ் ஆப் சம்சாரா' என்ற தன் இசை ஆல்பத்துக்காக கடந்த 2015ல் ஏற்கனவே கிராமி விருதை வென்றார். தற்போது, டிரம்ஸ் இசைக்கலைஞர் ஸ்டீவர்ட் கோப்லாண்ட் என்பவருடன் இணைந்து வெளியிட்டுள்ள 'டிவைன் டைட்ஸ்' என்ற இசை ஆல்பத்துக்கு கிராமி விருதை வென்றுள்ளார்.

மகனுடன் பங்கேற்ற ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 55, கடந்த 2010ல் இரு கிராமி விருதுகளை வென்றார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கான சிறந்த பின்னணி இசை மற்றும் அதே படத்தில் வெளியான, ஜெய் ஹோ பாடலுக்கு விருதுகளை வென்றார். அதன்பின், ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதை வழக்கமாக வைத்து உள்ளார். இந்த முறை ரஹ்மானுடன் அவரது மகன் அமீன், 19, கிராமி விருது நிகழ்வில் பங்கேற்றார். விழா அரங்கில் எடுக்கப்பட்ட, 'செல்பி' புகைப்படங்களை ரஹ்மானும், அமீனும் தங்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.