அடுத்தடுத்து இணையும் கோலிவுட் – டோலிவுட்

ஒரு காலத்தில் சென்னை தான் தென்னிந்திய சினிமாக்களுக்கு தலைநகரமாய் விளங்கியது. 80களின் துவக்கத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சம் மற்ற தென்னிந்தியப் படங்கள் அவர்களது மாநிலத் தலைநகரங்களை நோக்கி நகர்ந்தன. தெலுங்குத் திரையுலகம் ஐதராபாத்திற்கும், கன்னடத் திரையுலகம் பெங்களூருவுக்கும், மலையாளத் திரையுலகம் திருவனந்தபுரம், கொச்சி நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் அடுத்தடுத்து இணைய ஆரம்பித்துள்ளன. 'பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் தெலுங்கில் எடுக்கப்பட்டாலும் தமிழிலும் வெளியாகி இங்கு நல்ல வசூலைப் பெற்றன. அதே சமயம் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் பெரிய வசூலைப் பெறவில்லை என்றாலும், பல முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தமிழ் நடிகர்கள் சிலர் நேரடியாக தெலுங்குப் படங்களில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ளனர். தமிழ், தெலுங்கு என நேரடியாக இரு மொழிகளில் உருவாகும் படங்களில் 'வாத்தி' படத்தின் மூலம் தனுஷ், தன்னுடைய 20வது படத்தின் மூலம் சிவகார்த்திகேயன், தன்னுடைய 66வது படத்தின் மூலம் விஜய் ஆகியோர் களமிறங்கியுள்ளார்கள். தனது 18வது படமான ‛கட்டா குஸ்தி' மூலம் விஷ்ணு விஷாலும் நேரடியாக தெலுங்கில் கால்பதித்துள்ளார். இந்த படம் இரு மொழியில் தயாராவதோடு விஷ்ணு உடன் இணைந்து தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் தயாரிக்கிறார்.

இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக நேரடி தெலுங்குப் படத்தை தற்போது இயக்கி வருகிறார். ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படம் இது. இவருக்கடுத்து தற்போது வெங்கட் பிரபுவும் தமிழ், தெலுங்கில் தயாராகும் இரு மொழிப் படம் மூலம் தெலுங்கில் அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

பான்-இந்தியா பக்கம் போகக் கொஞ்சம் தாமதமானாலும் நமது நடிகர்களும், இயக்குனர்களும் பக்கத்து மாநிலத்து பக்கமாவது போகலாமே என தற்போது தெலுங்குப் பக்கம் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பட்டியலில் இன்னும் பலர் சேரலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.