ஆந்திராவில் நடந்த தெலுங்கு புத்தாண்டு விழாவில் இளவட்டக்கல் தூக்கி அசத்திய வடலிவிளை பெண்கள்

பணகுடி: ஆந்திராவில் நடந்த தெலுங்கு புத்தாண்டு விழாவில் நெல்லை மாவட்டம் வடலிவிளை பெண்கள் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி ெபற்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ளது வடலிவிளை கிராமம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இக்கிராமத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்கேற்று பல்வேறு எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி சாதனை புரிவர். இதுகுறித்த தகவல்கள் நாளிதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவி பிரபலமடைந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் நடைபெற்ற தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூகவலைதளங்களில் வடலிவிளை இளம்பெண்கள் இளவட்டக்கல் தூக்கும் போட்டியை ஏற்கனவே பார்த்திருந்த போட்டியாளர்கள் கடப்பாவிலும் இதேபோன்று போட்டியை நடத்தவும், இந்த போட்டியில் பங்கேற்கும்படியும் வடலிவிளை கிராம பெண்களுக்கு சமூகவலைதளம் வாயிலாக அழைப்பு விடுத்தனர்.இதையடுத்து வடலிவிளை கிராமத்தை சேர்ந்த குடும்ப பெண்களான தங்கபுஷ்பம் (33), பத்மபிரியா (34), ராஜகுமாரி (36) ஆகியோர் புத்தாண்டு விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற யுகாதி பாரம்பரிய விழாவில் வடலிவிளை பெண்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர். இதில் 60 கிலோ எடை பிரிவில் தங்கபுஷ்பம் முதலாவது பரிசினையும், 54 கிலோ எடை பிரிவில் பத்மபிரியா 2வது பரிசினையும், 56 கிலோ எடைபிரிவில் ராஜகுமாரி 3வது பரிசையும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற தங்கபுஷ்பத்திற்கு ரூ.8 ஆயிரமும், பட்டுப்புடவையும், 2, 3வது பரிசு பெற்ற பத்மபிரியா, ராஜகுமாரி ஆகியோருக்கு தலா ரூ.7 ஆயிரமும், பட்டுப்புடவை ஆகியவற்றை கடப்பா நகராட்சி சேர்மன் ஜெஸ்ஸி பிரபாகர் ரெட்டி வழங்கி கவுரவித்தார். இவர்களுக்கான போக்குவரத்து செலவையும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களே ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.