சொத்துவரி உயர்வு நியாயமற்றது.. வரி உயர்வை குறைக்குமாறு சரத்குமார் வலியுறுத்தல்.!!

150 சதவிகித சொத்துவரி உயர்வு நியாயமற்றது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடின்றி கொரோனாவால் ஏற்கெனவே அனைத்து தரப்பு மக்களின் தொழிலும், வணிகமும் பாதிக்கப்பட்டதில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவையும், விளைவுகளையும் சீர்செய்ய ஒவ்வொரு குடும்பமும் கடுமையாக போராடி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. இந்த சமயத்தில் தற்போது சொத்து வரியை உயர்த்தியுள்ளதால் மக்கள் மேலும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதில், சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவித்தது பேரதிர்ச்சியாக உள்ளது.

ஒன்றிய அரசின் 15 – வது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையிலும், விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான பணிகளுக்காக சொத்துவரி உயர்த்தப்படுவதாக, தமிழக அரசு தெரிவிக்கிறது. அரசின் வருவாய்க்கும், செலவின தேவைகளுக்கும் அரசு வரியை உயர்த்துகிறது, அரசு விதிக்கும் வரியை மக்கள் தவறாமல் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றாலும், மக்களின் வருவாய்க்கும், செலவின தேவைகளுக்கும், பொருளாதார மீட்டெடுப்பிற்கும் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அழுத்தம் கொடுப்பது நியாயமற்றது.

சாமானிய மக்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், ஒரே சமயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் வெவ்வேறு காரணங்களுக்காக விலையை உயர்த்தி கொண்டே இருப்பது எந்த விதத்தில் நியாயம்? மத்தளம் போல மக்களை இருபுறமும் அடித்து காயப்படுத்தாமல், அவர்களின் நிலையை உணர்ந்து வேலைவாய்ப்பு, பொருளாதார மீட்டெடுப்பு, வாழ்க்கைத்தர உயர்வுக்கு உதவி செய்து, பின்னர் வரி உயர்த்துவதை குறித்து பரிசீலிக்கலாமே தவிர, தற்போது உயர்த்தியது மக்கள் மீது மேலும் சுமையை திணிப்பதாகும்.

எனவே, தமிழக அரசு அதிகப்படியான சொத்து வரி உயர்வை குறைக்குமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.