தமிழில் அறிமுகம் : நாக சைதன்யா மகிழ்ச்சி

தெலுங்குத் திரையுலகத்தின் வாரிசு நடிகர்களில் முக்கியமானவர் நாக சைதன்யா. அவரது தாத்தா ஏடித நாகேஸ்வரராவ் அந்தக் காலத்திலேயே தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர். 1953ல் அவர் நடித்து வெளிவந்த 'தேவதாஸ்' படம் இன்றளவும் பல காதல் படங்களுக்கு உதாரணமாக உள்ளது. தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும் தெலுங்கில் தனி முத்திரை பதித்தவர் நாகேஸ்வர ராவ்.

நாகசைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா தமிழில் நேரடிப் படங்களில் நடிப்பதற்கு முன்பே சில டப்பிங் படங்களால் பிரபலமானவர். தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு 1989ல் வெளியான 'இதயத்தை திருடாதே, உதயம்” ஆகிய படங்கள் மூலம் இங்கும் வெற்றியை பதித்தார். அதன்பின்பு 1997ல் வெளியான 'ரட்சகன்' படம் மூலம்தான் நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்தார். அதற்குப் பின் 'தோழா' படத்தில் நடித்தார்.

தாத்தா, அப்பா ஆகியோரைத் தொடர்ந்து நாக சைதன்யா தற்போது நேரடியாக தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறை தமிழில் தடம் பதிக்க வருகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள இப்படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியானது. இப்படத்தில் நடிப்பது குறித்து, “எனது அடுத்த படமான நாகசைதன்யா 22 படம் தமிழ், தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அறிவிப்பது பற்றி மகிழ்ச்சி. இந்த புதிய பயணத்திற்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.