பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: பரூக் அப்துல்லா, முலாயம் சிங்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் மூத்த முலாயம் சிங் யாதவ் மற்றும் பிற தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

நாடாளுமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கம் போல், ஜனவரி 31-இல் தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்குப்பின் மத்திய பட்ஜெட் தாக்கலானது. கூட்டத்தொடரின் முதல் பாகம் கடந்த பிப்ரவரி 11-இல் முடிவடைந்தது. பிறகு இரண்டாம் பாகம் மார்ச் 14-இல் தொடங்கி நடைபெற்றது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 8-ம் தேதி கூட்டத்தொடரின் கடைசி நாளாகும்.

ஆனால் ராமநவமி உள்ளிட்ட காரணங்களால் ஒருநாள் முன்கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதுபோலவே நிறைவேற வேண்டிய மசோதாக்கள் உட்பட பெருமளவு பணிகள் இரண்டு அவைகளிலும் பெருமளவில் நிறைவடைந்தன. எனவே, ஒருநாள் முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று இரு அவைகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவையுடன், மாநிலங்களவையும் இன்று ஒத்திவைக்கப்பட்டன. மத்திய பட்ஜெட் மற்றும் அதுதொடர்பான நிதி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், சில முக்கிய சட்டத்திருத்த மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளன. இதில், குற்றவியல் நடைமுறை, டெல்லி மாநகராட்சி மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன.

‘‘இந்த அமர்வில் அனைவரின் பங்கேற்புடன் செயல்பாடு 129% ஆக இருந்தது. 8-வது அமர்வு வரை செயல்பாடு 106% ஆக இருந்தது. முந்தைய அனுபவங்களுடன் ஒப்பிடுகையில், அனைவரின் ஆதரவுடன் தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடர் சிறப்பாக நடைபெற்றது’’ என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். அதுபோலவே பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையின் செயல்பாடு 99.8 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் மூத்த முலாயம் சிங் யாதவ் மற்றும் பிற தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.