‘உடனடியாக மருந்துகளைக் கொடுங்க’ – உலக நாடுகளிடம் கைநீட்டும் இலங்கை டாக்டர்கள்

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. உச்சக்கட்ட பொருளாதார நெருக்கடியால் அந்த நாடே திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் வாழ வழியில்லாமல் இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். நாள்தோறும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கள்ளத்தோணிகள் மூலம் குடும்பம் குடும்பமாக இலங்கைத் தமிழர்கள் தஞ்சமடைய வருவதால் அந்தப் பகுதிகளில் கடலோர காவல்படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி வரும் குடும்பங்களை என்ன செய்வதென்றே தெரியாமல் கடலோர காவல் படை அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர். 

மேலும் படிக்க | இலங்கைக்கு அனுப்ப அரிசி, பருப்பு, மருந்து தயார்! மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு தகவல்

பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதிப் பொருட்கள் அனைத்தும் இலங்கைக்குள் செல்லவில்லை. இறக்குமதிக்கான எந்த வரியும் செலுத்தாததால் பெரும்பாலான பொருட்கள் இலங்கைக்குள் செல்லாமல் எல்லைக் கடல் பகுதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்காக உலக நாடுகளிடம் கடன் வாங்கும் நிலைக்கு இலங்கைச் சென்றுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளிடம் இலங்கை கடன் கேட்டு வருகிறது. உச்சக்கட்ட பொருளாதார நெருக்கடியால், கையிருப்பில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் காலியாகி வருகின்றன. செய்வதறியாது திகைக்கும் பொதுமக்கள், வீதிகளில் இறங்கி கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். அரசு அலுவலகங்கள் சூறையாடப்படுகின்றன. 

மேலும் படிக்க | இந்தியாவுக்கு இலங்கை சொல்லும் ‘ரகசியம்’ என்ன ?

அடிப்படைத் தேவை ஒருபுறமிருக்க, மருத்துவத்துறை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக, இலங்கையில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முக்கியமான மருந்துகள் எதுவும் கையிருப்பு இல்லாததால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின்  மருத்துவர்கள், செவிலியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள 100க்கும் மேற்பட்ட முதியவர்கள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க எந்தவித மருந்துகளும் இல்லாததால் அனைவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர். 

மருந்துகளை வழங்குவதில் இலங்கை அரசு கைவிரித்துவிட்டதால் உடனடியாக மருந்துகளை அனுப்பி உதவுமாறு உலக நாடுகளுக்கு அந்நாட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.